< Back
மாநில செய்திகள்
ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட்டை பதிவேற்றம் செய்ய நாளை கடைசி நாள்
மாநில செய்திகள்

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட்டை பதிவேற்றம் செய்ய நாளை கடைசி நாள்

தினத்தந்தி
|
26 Sept 2023 7:16 PM IST

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட்டை பதிவேற்றம் செய்ய நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் மற்றும் முறையான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு இல்லாததால் பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் அரங்கத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ரசிகர்கள் பலர் சமூக வலைதளத்தில் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினர். மேலும், இந்த நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் பேசுப்பொருளானது. தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் தவறுகளுக்கு வருந்துவதாக தெரிவித்திருந்தர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தவறுகளுக்கு பொறுப்பெற்று கொள்வதாகவும், இந்த இசை நிகழ்ச்சிக்கு பணம் செலுத்தி பங்கேற்க முடியாதவர்களுக்கு பணம் திருப்பி செலுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத ஆயிரக்கணக்கானோர் டிக்கெட்டியின் நகலை உரிய இமெயில் ஐடிக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் டிக்கெட் நகலை சரிபார்த்து அவர்களுக்கான கட்டணத்தை திருப்பி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குளறுபடியால் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட்டை பதிவேற்றம் செய்ய நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இதுவரை 7 ஆயிரம் பேர் டிக்கெட்டை ஸ்கேன் செய்து அனுப்பியுள்ளதாகவும், 3 ஆயிரம் பேரின் டிக்கெட்டுகளை பரிசீலித்து, ஆயிரம் பேருக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்