கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
|நாளை மகா சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
கன்னியாகுமரி,
சக்தியை வழிபட நவராத்திரி என்னும் ஒன்பது இரவுகள் இருப்பது போல், சிவபெருமானை வழிபாடு செய்ய மகா சிவராத்திரி என்னும் ஒரு நாள் முக்கியமானதாக இருக்கிறது. இந்த நாளில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான 4 ஜாம வேளைகளில் சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு நாளை (மார்ச் 8) மாலை 6 மணி தொடங்கி நாளை மறுநாள் (மார்ச் 9) காலை 6 மணி வரை மகா சிவராத்திரி தினம். சிவராத்திரி தினத்தன்று இரவு கண் விழிப்பது மிக அவசியம். விளக்கேற்றுவதும், அபிஷேகப் பொருட்கள் கொடுப்பதும் மிகுந்த புண்ணியத்தை தரும். சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இந்த நிலையில், சிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்டஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறைக்கு ஈடாக வருகிற 23-ந்தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.