தஞ்சாவூர்
சரக்கு வேனில் விற்கப்படும் தக்காளி
|தஞ்சையில் சரக்கு வேனில் கூவி, கூவி தக்காளி பழங்கள் 3-கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தஞ்சாவூர்;
தஞ்சையில் சரக்கு வேனில் கூவி, கூவி தக்காளி பழங்கள் 3-கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி
நாடு முழுவதும் கடந்த மாதங்களில் தக்காளி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் விளைவாக தக்காளியின் விலை உச்சம் தொட்டது. இதன்காரணமாக பொதுமக்கள் பலரும் தக்காளிக்கு பதில் புளியை பயன்படுத்தி சமையல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.வரலாறு காணாத விலை உயர்வின் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் தக்காளி சாகுபடி செய்திருந்த விவசாயிகள் பலரும் கோடீஸ்வரர் ஆக மாறியது நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தஞ்சை பகுதிகளில் கடந்த மாதங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
விலை வீழ்ச்சி
தற்போது தமிழகத்தில் சேலம், திண்டுக்கல், தேனி, பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகளவில் உள்ளது. இதனால் தக்காளியின் வரத்து அதிகரித்து உள்ளது. இதன்காரணமாக தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.வரத்து அதிகரிப்பு காரணமாக பல்வேறு பகுதிகளில் தக்காளி பழங்கள் வீணாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலான வியாபாரிகள் இவற்றை மலிவு விலைகளில் வாங்கி விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர்.
சரக்கு வேனில் விற்பனை
விலை வீழ்ச்சியின் காரணமாக வியாபாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சரக்கு வேனில் தக்காளி பழங்களை ஏற்றி சென்று விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில் இருந்து வாங்கி கொள்முதல் செய்யப்பட்ட தக்காளி தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சரக்கு வேன் மூலம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.வரத்து அதிகரிப்பு காரணமாக தற்போது 3 கிலோ ரூ.50-க்கு வீதி, வீதியாக வியாபாரிகள் கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர். சில வியாபாரிகள் சாலையோரத்தில் கடை அமைத்து தக்காளி விற்பனை செய்து வருகின்றனர்.
வரத்து அதிகரிப்பு
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில்:-திருச்சி மார்க்கெட்டில் இருந்து தக்காளியை விற்பனைக்காக எடுத்து வந்துள்ளேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி தட்டுபாடு ஏற்பட்டது பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். ஆனால் இப்போது வரத்து அதிகரித்து தக்காளி அதிகளவில் கிடைப்பதால் பொதுமக்களிடையே ஆர்வமின்றி விற்பனை மந்தமாக இருக்கிறது. இதனால் விற்பனைக்கு எடுத்து வந்த தக்காளி பழங்களை என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இருக்கிறோம் என தெரிவித்தார்.