< Back
மாநில செய்திகள்
அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளியை குறைந்த விலைக்கு விற்க வேண்டும்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளியை குறைந்த விலைக்கு விற்க வேண்டும்

தினத்தந்தி
|
8 July 2023 12:15 AM IST

அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளியை குறைந்த விலைக்கு விற்க வேண்டும்

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளியை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று இல்லத்தரசிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விண்ணை தொடும் விலையேற்றம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை விண்ணை தொட்டு கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் தங்கத்தை போல தக்காளியின் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது.

சமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருளான தக்காளியின் விலை ஏற்றம் இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாகையில் உள்ள கடைகளில் தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலான கடைகளில் குறைந்த அளவை தக்காளி விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கிலோ கணக்கில் வாங்கி வீட்டில் இருப்பு வைத்திருக்கும் இல்லத்தரசிகள் தற்போது கால், அரை என்று குறைந்த அளவிலேயே தக்காளியை வாங்கி செல்கின்றனர்.

விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

இதனால் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னையில் வசித்து வரும் மக்கள் தக்காளி விலை உயர்வால் பாதிக்காத வகையில் பண்ணை பசுமை கடைகள் மூலமாகவும், ரேஷன் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை தொடங்கி உள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படும் ரேஷன் கடைகளில் மட்டும் தற்போது தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் ரூ.100, ரூ.120 வரை விற்கப்பட்டாலும் ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது. ஒருவருக்கு ஒரு கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது.

இதேபோல நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன்கடைகளிலும் தக்காளியை குறைந்த விலைக்கு வழங்க வேண்டும் என்று ஏழை, எளிய நடுத்தர பொதுமக்கள், இல்லத்தரசிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தக்காளிக்கு தட்டுப்பாடு

இதுகுறித்து நாகையை சேர்ந்த இல்லத்தரசி ஜெயலட்சுமி:

ஏழைகளின் ஆப்பிள் என்று கூறப்படும் தக்காளியின் விலை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு உச்சம் தொட்டு உள்ளது. கடந்த மாதம் மகாராஷ்டிராவில் தக்காளிக்கு போதிய விலை இல்லை என்று அங்குள்ள விவசாயிகள் சாலையில் கொட்டி அழித்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறி தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தக்காளி இவ்வளவு விலை உயரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

கொரோனா காலத்தில் வெங்காயத்தின் விலை விண்ணைத்தொட்டது. அப்போது விவசாயிகளிடமிருந்து அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்தது. இது ஏழை எளிய நடுத்தர குடும்ப இல்லத்தரசிகள் இடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

அதேபோல தற்போது விலைவாசியில் உச்சம் தொட்டிருக்கும் தக்காளியை ரேஷன் கடையில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பது சாத்தியம் என்றால், அதேபோல தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனை செய்வதும் சாத்தியமே தவிர முடியாதது ஒன்றும் இல்லை. எனவே சென்னைக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி பகுதி ரேஷன் கடைகளில் தக்காளியை விற்க வேண்டும். அதைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்ய வேண்டும்.

ரேஷன்கடைகளில் விற்பனை

திட்டச்சேரியை சேர்ந்த இல்லத்தரசி மீனாட்சி: விலை ஏற்றத்தால் தக்காளியை பேருக்கு தான் வாங்குகிறோம். இட்லி, தோசைக்கு தக்காளி சட்னி அரைத்து வைப்போம். ஆனால் இப்போது தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தக்காளி வாங்கவே சிரமமாக இருக்கிறது. சாம்பாருக்காக ஒரே ஒரு தக்காளியை பயன்படுத்தும் நிலைக்கு வந்து விட்டோம். தக்காளி சட்னிக்கு பதிலாக தேங்காய் சட்னி அரைத்து வருகிறோம். பச்சை மிளகாயும் விலையேற்றத்தால் அதனை குறைத்து, காய்ந்த மிளகாய் பயன்படுத்தி வருகிறோம்.

அசைவத்திற்கு இஞ்சி அதிகமாக பயன்படுத்தி வந்தோம். இப்போது அதை குறைத்து விட்டோம். வாசத்திற்கு மட்டும் போடும் நிலைமைக்கு வந்து விட்டோம். இந்த விலைவாசி எப்போது குறையும் என்று தெரியவில்லை. எனவே சென்னையை போல அனைத்து மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளியை குறைந்த விலைக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்