< Back
மாநில செய்திகள்
எட்டாக்கனியாக மாறுகிறது தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

எட்டாக்கனியாக மாறுகிறது தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை

தினத்தந்தி
|
23 May 2022 2:13 AM IST

எட்டாக்கனியாக மாறுகிறது தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை

தஞ்சாவூர:

தஞ்சையில், கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.100-யை எட்டி, எட்டாக்கனியாக மாறுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏழைகளின் ஆப்பிள்

ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் தக்காளியானது ஒவ்வொரு வீட்டிலும் அன்றாட சமையலில் இடம் பெறும் தவிர்க்க முடியாத ஒரு பழமாகும். குழம்பில் சுவை கூட்டுவதில் தக்காளிக்கு முக்கிய பங்கு உண்டு. அசைவ உணவுகளிலும் சரி, சைவ உணவுகளிலும் சரி அதிகளவு பயன்படக்கூடியது. குறிப்பாக தக்காளி சாம்பார், ரசம், சட்னி போன்ற உணவில் அதிகளவு இடம் பெற்றிருக்கும்.

சமையல் இல்லாமல் சாலட், ஜூஸ், சூப் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது. தக்காளி பழத்தில் இல்லாத சத்துக்களே இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணுவார்கள். இத்தகையை தக்காளி உடல் ஆரோக்கியத்திற்கும், சரும அழகிற்கும் பெரிதும் உதவுகிறது. இப்படி தக்காளி பல்வேறு வகைகளில் மக்களுக்கு பயன்படுவதால் காய்கறி வாங்குவதற்காக மார்க்கெட்டிற்கு யார் சென்றாலும் முதலில் தக்காளியை தான் தேடி வாங்குவது உண்டு.

காட்சி பொருளாகவே

அப்படி தேடி விரும்பிய தக்காளியை இன்றைக்கு காட்சி பொருளாகவே இல்லத்தரசிகள் பார்த்துவிட்டு கடந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் தக்காளியின் விலையேற்றம் தான். தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் தக்காளியை தவிர்த்துவிட்டு மற்ற காய்கறிகளை நாடி மக்கள் செல்கின்றனர். தஞ்சை மாவட்டத்திலும் வரலாறு காணாத அளவுக்கு தக்காளி விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பும் தக்காளி விலை அதிகமாக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்தது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஏறுமுகத்தில் இருந்து வந்த தக்காளி விலை நேற்று சதம் அடித்தது. தஞ்சை மாநகரில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

விளைச்சல் பாதிப்பு

தஞ்சை காமராஜர் மார்க்கெட்டிற்கு தமிழகத்தில் உள்ள ஒட்டன்சத்திரம், மேட்டுப்பாளையம், பழனி, உடுமலைப்பேட்டை, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் லாரி, மினிவேன் போன்ற வாகனங்களில் தக்காளி, கத்தரி, கேரட் போன்ற காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்வேறு மாவட்டங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் வழக்கமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் இருந்து தக்காளி கொண்டு வரப்படுகிறது. அதுவும் 3-ல் ஒரு பங்கு அளவுக்கு தான் தக்காளி வரத்து உள்ளது. வரத்து குறைவாக உள்ளதுடன் விலையும் அதிகமாக இருந்ததால் தக்காளி வாங்க வந்த இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

எட்டாக்கனியாக மாறுகிறது

தஞ்சை மாலைநேர மார்க்கெட், கீழவாசல் மார்க்கெட்டில் இல்லத்தரசிகள் சிலர் தக்காளியை குறைந்த அளவிலேயே வாங்கி சென்றனர். அதாவது ஒரு கிலோ தக்காளி வாங்கி செல்லக்கூடியவர்கள் கால்கிலோ அளவுக்கு தான் தக்காளியை வாங்கி சென்றனர். பலர் தக்காளியை தவிர்த்துவிட்டு வேறு காய்கறிகளை வாங்கி சென்றனர்.

கடும் விலை உயர்வால் பல ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு தக்காளி சட்னிக்கு பதிலாக புதினா சட்னிக்கு ஓட்டல் உரிமையாளர்கள் தாவி உள்ளனர். விலை உயர்வில் இதேநிலை நீடித்தால் ஏழைகளின் எட்டாக் கனியாக தக்காளி மாறிவிடும். ஏற்கனவே வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்ந்துள்ள நிலயைில் தக்காளி விலை உயர்வு இல்லத்தரசிகளை மேலும் வேதனை அடைய செய்துள்ளது.

திகைப்பு

அன்றாட சமையலில் தக்காளிக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. பல வகையான உணவுகளில் தக்காளியும், வெங்காயமும் இடம் பெறாமல் இருக்காது. ஆனால் தக்காளியின் இந்த விலையேற்றத்தில் என்ன சமைப்பது, எப்படி சமாளிப்பது என இல்லத்தரசிகள் திகைத்து போயிருக்கிறார்கள். தக்காளி சேர்க்காமல் எப்படி சமைக்கலாம் என்று யோசித்து வருகின்றனர்.

தொடர் மழை மட்டுமின்றி பெட்ரோல், டீசல் விலை உயர்வும் இந்த காய்கறி விலையேற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது. அதாவது காய்கறிகளை ஏற்றி வரக்கூடிய லாரி, மினிவேன்களில் வாடகையானது இந்த பெட்ரோல், டீசல் விலையின் காரணமாக உயர்ந்துள்ளது. இந்த வாடகை உயர்வும் காய்கறி விலை உயர வழி வகுக்கிறது. தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு இருப்பதால் வாடகை குறைக்கப்பட்டு காய்கறி விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இல்லத்தரசிகள் கருத்து

இது குறித்து இல்லத்தரசிகள் கூறும்போது, குழம்பில் தக்காளியை சேர்த்தால் சுவையாக இருக்கும். ஆனால் இப்படி விலையேறி கொண்டே சென்றால் சுவையுடன் உணவு சாப்பிடுவதை மறந்துவிட்டு, ஏதோ சமையல் செய்து சாப்பிடுவோம் என்ற மனநிலை தான் ஏற்படுகிறது. இருந்தாலும் தக்காளி இல்லாமல் சுவையாக எப்படி சமையல் செய்வது என கூகூல் மூலம் தேட வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். தக்காளி இல்லாமல் புளியை அதிகமாக சேர்த்து குழம்பு வைக்க முயற்சி செய்கிறோம் என்றனர்.

வியாபாரிகள் கூறும்போது, விலை குறைந்த சமயங்களில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் தக்காளியை வாங்கி சென்றனர். தற்போது விலையேற்றத்தின் காரணமாக குறைவாகவே தக்காளியை வாங்கி செல்கின்றனர். வரத்து குறைவாக இருப்பதால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகள் மட்டுமின்றி சில்லரை வியாபாரிகளும் தக்காளியை குறைந்த அளவே வாங்கி செல்கின்றனர். தக்காளி வரத்து அதிகரிக்கும்போது விலை குறையும் என்றனர்.

ரூ.100-யை எட்டிய பீன்ஸ்- அவரைக்காய்

தக்காளி மட்டுமின்றி பீன்ஸ், அவரைக்காய் விலையும் ரூ.100-யை எட்டியுள்ளது. தஞ்சையில் நேற்று ஒரு கிலோ பீன்ஸ் ரூ.100-க்கும், அவரைக்காய் ரூ.80 முதல் ரூ.120 வரையும் விற்பனையானது.

மேலும் செய்திகள்