< Back
மாநில செய்திகள்
கரூரில் தக்காளி விலை மீண்டும் ஏறுமுகம்: ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை
கரூர்
மாநில செய்திகள்

கரூரில் தக்காளி விலை மீண்டும் ஏறுமுகம்: ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை

தினத்தந்தி
|
19 July 2023 11:43 PM IST

கரூரில் தக்காளி விலை மீண்டும் ஏறுமுகத்தில் இருக்கிறது. இதனால் ஒரு கிேலா ரூ.140-க்கு விற்பனையாகிறது.

தக்காளி விலை ஏறுமுகம்

தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் கடந்த வாரம் இறுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்பனை ஆனது. அதற்கு முந்தைய நாட்களில் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை சென்றது. பின்னர் தக்காளி விலை சற்று குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் தக்காளி விலை ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அந்தவகையில் கரூர் தினசரி மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோவுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.140 வரை தக்காளி விற்பனை ஆனது. அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் இருந்து இன்னும் போதிய அளவுக்கு வரத்து இல்லாததால், தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சின்ன வெங்காயம் ரூ.150

இதேபோல் கரூரில் சின்ன வெங்காயத்தின் விலையும் அதிகரித்து உள்ளது. நேற்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.150-க்கு விற்பனை ஆனது. தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பீன்ஸ், கோழி அவரைக்காய் ஆகியவற்றின் விலை ஏற்கனவே ரூ.100-ஐ கடந்து விற்பனை ஆகின்றன.

கரூர் தினசரி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் விலை விவரம் வருமாறு (1 கிலோ) :- பீன்ஸ் ரூ.160-க்கும், கோழி அவரைக்காய் ரூ.160-க்கும், பெரிய வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40-க்கும், பாகற்காய் ரூ.80-க்கும், முள்ளங்கி ரூ.60-க்கும், கேரட் ரூ.80-க்கும், பீட்ரூட் ரூ.60-க்கும், புடலங்காய் ரூ.60-க்கும், உருளைகிழங்கு ரூ.40-க்கும், ஊட்டி உருளைகிழங்கு ரூ.60-க்கும், வெண்டைக்காய் ரூ.50-க்கும், கத்திரிக்காய் ரூ.60-க்கும், பீர்க்கங்காய் ரூ.60-க்கும், பட்டை அவரைக்காய் ரூ.80-க்கும், சுரைக்காய் (ஒன்று) ரூ.20-க்கும், இஞ்சி ரூ.350-க்கும் விற்பனையானது.

மேலும் செய்திகள்