தஞ்சாவூர்
கும்பகோணத்தில் தக்காளி விலை கடும் சரிவு
|கும்பகோணத்தில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்துள்ளது. 2 கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனையானது.
கும்பகோணம்;
கும்பகோணத்தில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்துள்ளது. 2 கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனையானது.
தக்காளி விலை
சைவம் மற்றும் அசைவ உணவுகளிலும் தக்காளியின் பங்கு மிக முக்கியம். தமிழகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தக்காளி விலை அதிகரித்து காணப்பட்டது.இதனால் உணவுகளில் தக்காளியை சேர்க்க வேண்டுமா? என்ற எண்ணத்தில் இல்லத்தரசிகள் இருந்தனர். கும்பகோணத்திலும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்றது. கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் அதிகபட்சமாக 1 கிலோ தக்காளி ரூ.130 வரை விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
விலை குறைவு
சமையலுக்கு முக்கியமான காய்கறி என்பதால் விலை குறைந்து காணப்பட்ட நேரத்தில், மக்கள் கிலோ கணக்கில் தக்காளியை வாங்கி சென்றனர். ஆனால் விலை உயர்வால், கிலோ கணக்கில் வாங்கியவர்கள் ½ கிலோ, ¼ கிலோ அளவுக்கு வாங்கி சென்றனர். இந்த நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்தது. கும்பகோணத்தில் நேற்று தக்காளி விலை குறைந்து 1 கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.தக்காளி விலை தற்போது குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்தனர். தக்காளி விலை குறைவை தொடர்ந்து வெளிமாவட்டங்களில் இருந்து சரக்கு வேன், லோடு ஆட்டோக்களில் மொத்தமாக வாங்கி வந்து வீதி வீதியாகவும், கிராமங்கள் தோறும் தக்காளியை விற்பனை செய்து வருகின்றனர்.
சின்னவெங்காயம் விலை உயர்வு
சில்லறை விற்பனை கடைகளில் தக்காளியின் தரத்திற்கு ஏற்றவாறு 2 கிலோ தக்காளி ரூ.30 வரை விற்பனையாகிறது. இதைப்போல பச்சை மிளகாய் விலையும் குறைந்துள்ளது. ரூ.30-க்கு விற்ற மிளகாய் நேற்று ரூ.22-க்கு விற்பனையானது. பீன்ஸ் கடந்த வாரம் வரை ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையானது. ஆனால் நேற்று ரூ.50-க்கு விற்பனையானது. தக்காளி, பச்சை மிளகாய் விலை குறைந்தாலும், சின்ன வெங்காயம் உள்ளிட்ட மற்ற காய்கறிகளின் விலை உயர தொடங்கிவிட்டது.1 கிலோ சின்ன வெங்காயம் கடந்தவாரம் ரூ.40-க்கு விற்பனையானது. இந்த நிலையில் வரத்து குறைவால் நேற்று ரூ.60 முதல் ரூ.75 வரை விற்பனையானது.