நீலகிரி
தக்காளி விலை கடும் வீழ்ச்சி
|நீலகிரி மாவட்டத்தில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. கிலோ ரூ.35-க்கு விற்பனையாவதால், இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. கிலோ ரூ.35-க்கு விற்பனையாவதால், இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
சமவெளி காய்கறிகள்
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் விளைவிக்கப்படும் மலைகாய்கறிகளான கேரட், பீட்ரூட், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர், மேரக்காய் உள்ளிட்ட காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இதேபோன்று சமவெளி காய்கறிகளான தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் உள்ளிட்டவை நீலகிரி மாவட்டத்துக்கு சரக்கு வாகனங்களில் உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி
இதற்கிடையில் கடந்த 2 மாதங்களாக தக்காளி வரத்து குறைந்ததால், விலை பல மடங்கு உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.100-ஐ தாண்டியது.
அதாவது நீலகிரி மாவட்டம் ஊட்டி உழவர் சந்தையில் கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி ஒரு கிலோ தக்காளி ரூ.44-க்கு விற்கப்பட்டது. கடந்த மாதம் 28-ந் தேதி ஒரு கிலோ ரூ.100-ஐ தாண்டியது. 31-ந் தேதி ஒரு கிலோ ரூ.130-க்கு உயர்ந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து அதிகரித்து, விலை படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி ஊட்டி உழவர் சந்தையில் கடந்த 16-ந் தேதி ஒரு கிலோ ரூ.50-க்கும், நேற்று ரூ.35-க்கும் தக்காளி விற்கப்பட்டது. மேலும் மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.45-க்கும், சில்லறை கடைகளில் கிலோ ரூ.50-க்கும் விற்கப்பட்டது. தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து வருவதால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
இன்னும் விலை குறையும்
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ஊட்டி உழவர் சந்தைக்கு தினசரி 3 டன் உள்பட நீலகிரி மாவட்டத்திற்கு தினசரி சுமார் 18 டன் தக்காளி கொண்டு வரப்படுகிறது. கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து 75 சதவீதமும், காரமடை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து 25 சதவீதமும் தக்காளி வருகிறது. இதற்கு முன்பு தக்காளி வரத்து குறைந்ததால் விலை அதிகரித்தது.
தற்போது வரத்து அதிகரித்து உள்ளதால் விலை குறைந்து வருகிறது. வரத்து மேலும் அதிகரித்தால் விலை இன்னும் குறையும் என்றனர்.