கோயம்புத்தூர்
தக்காளி விலை வீழ்ச்சி
|கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்தது. கிலோ ரூ.57-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்தது. கிலோ ரூ.57-க்கு விற்பனை செய்யப்பட்டது.
காய்கறி சந்தை
கிணத்துக்கடவில் தினசரி காய்கறி சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் அறுவடை செய்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக கிணத்துக்கடவு, நெகமம், செஞ்சேரிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் அதிகளவில் தக்காளிகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பருவமழை சரிவர பெய்யாததால் தக்காளி வரத்து குறைந்து வருகிறது. இதனால் விலையும் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த மாத இறுதியில் ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ரூ.160-க்கு ஏலம் போனது. மேலும் 45 டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
விலை வீழ்ச்சி
தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தக்காளி வரத்து அதிகரித்து வருவதால், விலை குறைந்து வருகிறது. அதன்படி கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கும் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 90 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. வரத்து அதிகமாக இருந்ததால் விலை குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.57-க்கு விற்பனையானது. இந்த விலை கடந்த மாத இறுதியில் உள்ள விலையை விட ஒரு கிலோவிற்கு ரூ.103 குறைவு ஆகும். தக்காளி விலை திடீரென விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சில்லறை விலை
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைவாக கிடைத்துள்ளது. இன்னும் தக்காளி வரத்து அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளதால் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. கிணத்துக்கடவு பகுதிகளில் தக்காளி சீசன் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கும். அப்போது தக்காளி விலை கடும் வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்பு உள்ளது. தற்போது சில்லறை விலையில் தக்காளி கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றனர்.