தக்காளி விலை 3-வது நாளாக தொடர்ந்து உயர்வு
|தக்காளி விலை 3-வது நாளாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் ஒரு கிலோ தக்காளி வெளி மார்க்கெட்டில் ரூ.200-ஐ தொடும் அபாயம் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சென்னை,
தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் இந்த மாதத்தில் இருந்து கிடுகிடுவென உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகபட்சமாக ரூ.150 வரை சென்றது. வெளி மார்க்கெட்டில் ரூ.180 வரை விற்கப்பட்டது.
இடையில் ஓரளவு விலை குறைந்து வந்தது. அதன்படி, கடந்த 24-ந்தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.
அதன் பின்னர், மீண்டும் விலை உயரத் தொடங்கியது. கடந்த 25-ந்தேதி கிலோவுக்கு ரூ.10-ம், அதற்கு மறு நாள் கிலோவுக்கு ரூ.20-ம் உயர்ந்து இருந்தது. 3-வது நாளாக நேற்றும் விலை கிலோவுக்கு ரூ.10 அதிகரித்து காணப்பட்டு, ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிலோ ரூ.200-ஐ தொடும்
இதன் மூலம் கடந்த 3 நாட்களில் மட்டும் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.40 வரை உயர்ந்துள்ளது. தொடர்ந்து விலை ஏறுமுகத்தில் இருப்பதால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்திருக்கின்றனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத்து மிகவும் குறைந்திருப்பதாலும், மொத்த தேவையில் 30 சதவீதம் அளவுக்கு மட்டுமே தக்காளி வரத்து இருப்பதாலும் அதன் விலை ராக்கெட் வேகத்தில் உயருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றன.
இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் ஒரு கிலோ தக்காளி மொத்த மார்க்கெட்டில் மேலும் அதிகரித்து, வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி விலை இரட்டை சதம் (ரூ.200) அடித்துவிடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.