சேலம்
தலைவாசல் மார்க்கெட்டில்தக்காளி விலை உயர்வு கிலோ ரூ.200- க்கு விற்பனை
|தலைவாசல்
தலைவாசல் மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தினசரி மார்க்கெட்
சேலம் மாவட்டம் தலைவாசல் பஸ் நிலையம் அருகில் தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கேரளா, கோவை, திருச்சி, கடலூர், ஊட்டி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.
அந்த வகையில் காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைவாக உள்ளது. இதனால் விலை கிடுகிடு வென உயர்ந்து காணப்படுகிறது. அதாவது கிலோ ரூ.200 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
பெண்கள் வேதனை
வாழப்பாடி, கருமந்துறை, வீரகனூர், தலைவாசல் பகுதியில் இருந்து தினசரி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் ஏற்கனவே ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் கிலோ கணக்கில் தக்காளி வாங்குவதை பெண்கள் தவிர்த்து உள்ளனர். அதாவது குறைந்த அளவே வாங்கி செல்வதை காண முடிந்தது. தக்காளி விலையால் சமையல் செய்ய முடியவில்லையே என்று பெண்கள் வேதனை தெரிவித்தனர்.