அரியலூர்
அரியலூரில் தக்காளி விலை குறைந்தது
|அரியலூரில் தக்காளி விலை குறைந்தது. கிலோ ரூ.30 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளிகளை விற்க நடவடிக்கை எடுத்தது. இருந்த போதிலும் தரமான தக்காளி கிடைக்காமலும், விலை அதிகமாக இருந்ததாலும் இல்லத்தரசிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சிரமம் அடைந்தனர். இந்தநிலையில் அரியலூரில் கடந்த ஒரு வாரமாக தக்காளியின் வரத்து அதிகமாக இருந்ததால் தக்காளி விலை படிப்படியாக குறைய தொடங்கியது. அரியலூர் வாரச்சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.30 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது.
சிறிய அளவிலான தக்காளிகளை வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் வைத்து விற்பனை செய்தனர். இதேபோல் ரூ.150-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் உள்பட அனைத்து காய்கறிகளின் விலையும் படிப்படியாக குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று அரியலூரில் பெய்த லேசான மலையில் வாரச்சந்தையில் மழை நீர் தேங்கி வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். இருந்தபோதும் பொதுமக்கள் மழையை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்த படி காய்கறிகளை வாங்கி சென்றனர்.