< Back
மாநில செய்திகள்
தக்காளி சாகுபடி பரப்பு குறைந்தது
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

தக்காளி சாகுபடி பரப்பு குறைந்தது

தினத்தந்தி
|
19 Oct 2023 1:45 AM IST

பருவமழை தாமதத்தால் கிணத்துக்கடவு பகுதியில் தக்காளி சாகுபடி பரப்பு குறைந்தது.

தக்காளி...

இது ஏழைகளின் ஆப்பிள்...

அதனால்தான், இல்லத்தரசிகளின் இஷ்ட சமையலில் இன்றியமையாத இடம் பிடிக்கிறது.

தக்காளி சாகுபடி

அத்தகைய தக்காளி, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் ஆண்டுதோறும் சுமார் 1,600 ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா உள்பட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

எப்போதும், தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்வது வழக்கம்.

தள்ளிப்போன மழை

அதன்படி இந்த ஆண்டும் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்ய நிலங்களை உழுது தயார் செய்து வைத்திருந்தனர். ஆனால் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. வழக்கமாக பெய்யும் நாட்களில் இருந்து தள்ளிப்போனது.

இந்த தாமதத்தால் தக்காளி சாகுபடி செய்யலாமா, வேண்டாமா என்ற சந்தேகத்தில் விவசாயிகள் இருந்தனர். அதன்பிறகு ஒருசில இடங்களில் தாமதமாக மழை பெய்ய தொடங்கியது. இதனால் அந்த இடங்களை சேர்ந்த விவசாயிகள் மட்டுமே தக்காளி சாகுபடி செய்தனர்.

மற்ற இடங்களை சேர்ந்த விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்யவில்லை. இதன் காரணமாக தக்காளி சாகுபடி பரப்பு 550 ஏக்கராக குறைந்தது.

விளைச்சல் இல்லை

அதன்பிறகு தென்மேற்கு பருவமழை பெய்தாலும், வழக்கமாக பெய்யும் அளவை விட 8 சதவீதம் குறைவாக பெய்தது. இதனால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கும், போதிய விளைச்சல் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

இதற்கிடையில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி தக்காளி சாகுபடி செய்ய விவசாயிகள் மீண்டும் நிலங்களை உழுது தயார்படுத்தி வருகின்றனர்.

விண்ணை தொடும் விலை

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கிணத்துக்கடவில் கடந்த ஆண்டு கூட ஓரளவு தென்மேற்கு பருவமழை பெய்தது. ஆனால் இந்த ஆண்டுமுற்றிலும் ஏமாற்றி விட்டது. இதனால் திட்டமிட்டபடி தக்காளி சாகுபடி நடைபெறுவதில் சிக்கல் நிலவுகிறது.

வடகிழக்கு பருவமழை சீராக பெய்யும் சமயத்தில், தக்காளி சாகுபடி பரப்பு மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதுவும் பொய்த்து போனால் இந்த ஆண்டு தக்காளி சாகுபடி முற்றிலும் பாதித்துவிடும். இதனால் விலை விண்ணை தொட வாய்ப்பு அதிகம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


மேலும் செய்திகள்