கிருஷ்ணகிரி
நாச்சிகுப்பத்தில்ஒரு கிலோ தக்காளியை ரூ.50-க்கு விற்ற வியாபாரிகள்பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்
|வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்தனர். இந்த நிலையில் கால நிலை மாற்றம் மற்றும் தட்ப வெப்பநிலை காரணமாக தக்காளி வரத்து குறைந்தது. இதனால் வேப்பனப்பள்ளி பகுதியில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையும், 15 கிலோ கொண்ட கூடை ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை வேப்பனப்பள்ளி அருகே நாச்சிகுப்பம் பகுதிக்கு ஆட்டோக்களில் வந்த சில வியாபாரிகள் ஒரு கிலோ தக்காளியை ரூ.50-க்கு விற்றனர்.
இதனை அறிந்த பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு தக்காளியை வாங்கி சென்றனர். ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் நாச்சிகுப்பம் பகுதியில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்ற சம்பவம் மற்ற வியாபாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.