தர்மபுரி
தொப்பூர் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு புதிய கட்டண உயர்வுஇன்று முதல் அமலுக்கு வந்தது
|நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே பாளையம் சுங்கச்சாவடியில் உயர்த்தப்பட்ட புதிய கட்டணம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வந்தது.
கட்டண உயர்வு அமல்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் 4 வழி தேசிய நெடுஞ்சாலை தர்மபுரி மாவட்டத்தின் வழியாக செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு நாளில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இவ்வாறு வந்து செல்லும் வாகனங்களுக்கு தொப்பூர் அருகே குறிஞ்சி நகரில் உள்ள பாளையம் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை முதல் இந்த சுங்கச்சாவடியில் புதிதாக நிர்ணயிக்கப்பட்ட கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
இலகு ரக வாகனங்கள்
இதன்படி பஸ்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு ரூ.420-ல் இருந்து ரூ.425 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.5 கட்டணம் உயர்ந்துள்ளது. பல அச்சு பொருத்திய கனரக வாகனங்களுக்கு ரூ.675-ல் இருந்து ரூ.685-ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ரூ.10 கட்டணம் உயர்ந்துள்ளது. இதேபோல் பல அச்சு பொருத்திய கனரக வாகனங்கள் ஒரு முறைக்கு மேல் சென்று வர கட்டணம் ரூ.1010 லிருந்து ரூ.1025- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ரூ.15 உயர்ந்துள்ளது.
கார் மற்றும் இலகுரக வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால் இந்த வாகனங்களுக்கு ஏற்கனவே அமலில் உள்ள ரூ.120 கட்டணம் தொடர்கிறது. பாளையம் சுங்கச்சாவடியில் ஒரு நாளுக்கு வாகனங்களுக்கான சுங்க கட்டணம் குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது.