< Back
மாநில செய்திகள்
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்
மதுரை
மாநில செய்திகள்

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்

தினத்தந்தி
|
11 Sept 2022 2:00 AM IST

திருமங்கலம்-ராஜபாளையம் இடையே 4 வழிச்சாலை அமைக்க வேண்டும். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கொடுத்து உள்ளார்.

திருமங்கலம்-ராஜபாளையம் இடையே 4 வழிச்சாலை அமைக்க வேண்டும். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கொடுத்து உள்ளார்.

பிரச்சினைகள்

ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் 10 குறைகளை எம்.எல்.ஏ.க்கள் கலெக்டரிடம் வழங்க வேண்டும் என்று, அதனை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதன்படி திருமங்கலம் தொகுதி பிரச்சினைகளை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி.உதயகுமார், கலெக்டர் அனிஷ்சேகரிடம் நேற்று வழங்கினார்.

அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

செங்கலை காட்டி மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த தி.மு.க. தற்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை. எய்ம்ஸ் பணிகள் கிடப்பில் போட்ட கல்லாக உள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் முதியோர் உதவித்தொகை திட்டத்தில் 37 லட்சம் முதியோருக்கு ரூ.4 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முறையாக வழங்கப்பட்டன. முதியோர் உதவி தொகையை ரூ.1500-ஆக உயர்த்தி வழங்குவதாக தேர்தல் நேரத்தில் அறிவித்த தி.மு.க. தற்பொழுது முதியோர் உதவித்தொகையை ரத்து செய்து வருவது வேதனை அளிக்கிறது. மதுரை வளர்ச்சிக்காக தி.மு.க. அரசு இதுவரை ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. முதல்-அமைச்சர், மதுரை மக்களை உண்மையாக நேசிப்பவராக இருந்தால் வரும் 15-ந் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் மதுரைக்கு செயல்படுத்திய திட்டங்கள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும்.

சுங்கச்சாவடி அகற்றம்

மதுரையில் கருணாநிதி பெயரில் அமைக்கப்படும் நூலகத்திற்கு பல முறை வருகை புரிந்த முதல்-அமைச்சர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமையவுள்ள இடத்தை ஒருமுறை கூட பார்வையிடவில்லை. முதல்-அமைச்சர் எதிர்க்கட்சியையும், எதிர்க்கட்சி தலைவரையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். திருமங்கலம் தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய 10 கோரிக்கைகளை கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன். அதில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு ெகாண்டு வரவேண்டும். தே.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை போக்க டேராபாறை அணைகட்ட வேண்டும். திருமங்கலம் நகர்பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும். திருமங்கலம் நகர்பகுதியில் பஸ் நிலையம் கட்ட வேண்டும். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். உச்சப்பட்டி தோப்பூர் துணைக்கோள் நகரம் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

4 வழிச்சாலை

திருமங்கலம் ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுதல், கள்ளிக்குடி ஒன்றியத்தில் குராயூர் பகுதியில் உள்ள மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிய அணை கட்ட வேண்டும். கள்ளிக்குடி ஒன்றியம், சின்ன உலகாணி, கூடக்கோவில் மேலஉப்பிலிக்குண்டு, பகுதிகளில் நிரந்தர குடிநீர் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைத்திட நிலையூர் நீட்டிப்பு கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். திருமங்கலம்-ராஜபாளையம் சாலையை நான்குவழிச்சாலையாக மாற்ற வேண்டும். 58 கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்