< Back
மாநில செய்திகள்
சுங்கச்சாவடி முற்றுகை: நெய்வேலி அருகே அமைச்சர் சிவசங்கரின் காரை மறித்து தே.மு.தி.க.வினர் போராட்டம்
மாநில செய்திகள்

சுங்கச்சாவடி முற்றுகை: நெய்வேலி அருகே அமைச்சர் சிவசங்கரின் காரை மறித்து தே.மு.தி.க.வினர் போராட்டம்

தினத்தந்தி
|
10 Sept 2023 2:36 AM IST

நெய்வேலி அருகே சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற தே.மு.தி.க.வினர் அந்த வழியாக வந்த அமைச்சா் சிவசங்கரின் காரை வழிமறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

சுங்கச்சாவடி முற்றுகை

சுங்கக்கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி தே.மு.தி.க. சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் தே.மு.தி.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் நெய்வேலி அருகே ஊ.மங்கலத்தில் மாவட்ட செயலாளர்கள் சிவக்கொழுந்து, உமாநாத் ஆகியோர் தலைமையில் தே.மு.தி.க.வினர் ஒன்று திரண்டு பொன்னாலகரம் சுங்கச்சாவடி அருகில் வந்தனர்.

போலீசார் தடுத்து நிறுத்தினர்

பின்னர் அவர்கள் அங்கிருந்து கட்சி கொடிகளை கையில் பிடித்து கொண்டு கோஷம் எழுப்பியபடி சுங்கச்சாவடியை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அங்கே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அந்த நேரத்தில் கடலூருக்கு அந்த வழியாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் கார் வந்தது. இதை பார்த்த தே.மு.தி.க.வினர் திடீரென அமைச்சர் சிவசங்கரின் காரை வழிமறித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அவசர அவசரமாக அப்புறப்படுத்தினர். இதன் பின்னர் அமைச்சர் சிவசங்கர் அங்கிருந்து கடலூருக்கு புறப்பட்டு சென்றார்.

200 பேர் கைது

இதையடுத்து சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்றதாக கூறி தே.மு.தி.க.வினர் 200 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

மேலும் செய்திகள்