கள்ளக்குறிச்சி
4¼ லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்க டோக்கன் வினியோகம் தொடங்கியது
|கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4¼ லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்க டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது
கள்ளக்குறிச்சி
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வருகிற 9-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இலங்கை அகதிகளுக்கான 77 குடும்ப அட்டைகள் உள்பட மொத்தம் 4 லட்சத்து 32 ஆயிரத்து 65 குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
வீடு, வீடாக டோக்கன் வினியோகம்
ரேஷன் கடைகளில் பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும்பொருட்டு அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வீடு, வீடாகச்சென்று பொதுமக்கள் எந்த நாட்களில், எந்த நேரத்தில் கடைக்குச்சென்று பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்ற விவரத்தை தெரிவித்து டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் நேற்று முதல் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். வருகிற 8-ந் தேதிக்குள் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கும் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.