< Back
மாநில செய்திகள்
ஒன்று சேர்ந்து பாஜகவின் சதிகளை முறியடிக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
மாநில செய்திகள்

ஒன்று சேர்ந்து பாஜகவின் சதிகளை முறியடிக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

தினத்தந்தி
|
16 Sept 2023 6:28 PM IST

ஒன்று சேர்ந்து பாஜகவின் சதிகளை முறியடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பகிர்ந்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜகவின் திசை திருப்பும் தந்திரங்களுக்கு சளைக்காமல் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் (எக்ஸ்) பதிவில், "செப்டம்பர் 18-ம் தேதி முதல் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நெருங்கி வரும் நிலையில், நாம் ஒன்றிணைந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் இது.

நம்முடைய நோக்கம் தெளிவாக உள்ளது: பாஜகவின் திசை திருப்பும் தந்திரங்களுக்கு சளைக்காதீர்கள். வலுவாக நில்லுங்கள், குரல் எழுப்புங்கள், மணிப்பூர் வன்முறை மற்றும் சிஏஜி அறிக்கையில் கூறப்பட்ட முறைகேடுகள் போன்ற முக்கியமான பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். நாம் ஒன்று சேர்ந்து, பாஜகவின் சதிகளை முறியடித்து, நமது மாபெரும் குடியரசின் நீதியை உறுதி செய்ய முடியும்" என்று தெரிவித்து உள்ளார்.


மேலும் செய்திகள்