பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
|பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு எமிஸ் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பொது மாறுதல், பணி நிரவல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்புபவர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியானது.
அதன்படி, கடந்த 13-ந்தேதியில் இருந்து விண்ணப்பப் பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. எமிஸ் தளம் முடங்கி போகும் அளவுக்கு ஆசிரியர்கள் போட்டிப் போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
அந்த வகையில், தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல்களுக்கு 26 ஆயிரத்து 75 பேரும், பள்ளிக்கல்வித் துறையில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் மாறுதல், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல்களுக்கு 37 ஆயிரத்து 358 பேரும் என மொத்தம் 63 ஆயிரத்து 433 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர்.
எமிஸ் தளத்தில் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். கலந்தாய்வு வருகிற 24-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் (ஜூன்) 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது.