< Back
மாநில செய்திகள்
மாநகர பஸ்களில் பயணம் செய்ய முதியோர் இலவச பஸ் டோக்கன்கள்  21-ந்தேதி முதல் வழங்கப்படுகிறது
சென்னை
மாநில செய்திகள்

மாநகர பஸ்களில் பயணம் செய்ய முதியோர் இலவச பஸ் டோக்கன்கள் 21-ந்தேதி முதல் வழங்கப்படுகிறது

தினத்தந்தி
|
19 Jun 2022 12:01 PM IST

மாநகர பஸ்களில் பயணம் செய்ய, சென்னை வாழ் முதியோர்களுக்கு இலவச பஸ் பயண டோக்கன்கள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.

மாநகர் போக்குவரத்துக் கழகப் பஸ்களில், 60 வயதிற்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில், இலவச பஸ் பயண டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றது. நடப்பு மாதம் வரை பயணம் செய்யும் வகையில், மூத்த குடிமக்களுக்கு பயண அட்டை மற்றும் டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

அடுத்த அரையாண்டிற்கு, ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு இலவச பஸ் பயண டோக்கன்கள் மற்றும் பயண அட்டைகள் 40 மையங்களில், வரும் 21-ந்தேதியில் இருந்து ஜூலை 31-ந்தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படுகிறது. அதன் பின்னர், வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி முதல் அந்தந்த பணிமனைகளின் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் வழங்கப்படுகிறது.

சென்னை வாழ் மூத்த குடிமக்கள், இத்தகைய இலவச பயண அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை புதியதாக பெறுவதற்கு இருப்பிட சான்றாக ரேஷன் கார்டு நகலுடன், வயது சான்றாக ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டையின் நகல், 2 கலர் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

சம்மந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்க்கும் வகையில் அவற்றின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும். புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது முந்தைய இலவச பயண அடையாள அட்டையை மட்டும் கொண்டு வரவேண்டும்.

அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மந்தைவெளி, தியாகராயநகர், சைதாப்பேட்டை, சென்டிரல் பஸ் நிலையம், பாரிமுனை, குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி, அய்யப்பன் தாங்கல், வடபழனி, கே.கே.நகர், ஆதம்பாக்கம், வேளச்சேரி, அண்ணாநகர், கோயம்பேடு, அம்பத்தூர், ஆவடி, அயனாவரம், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, எண்ணூர், வியாசர்பாடி, எம்.கே.பி. நகர், மாதவரம், பாடியநல்லூர், செங்குன்றம், தாம்பரம், மெப்ஸ் பஸ் நிலையம், பூந்தமல்லி, பெரம்பூர் பேசின்பாலம், வள்ளலார் நகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் உள்ள பஸ் நிலையங்களில் டோக்கன் வழங்கப்படுகிறது.

மேற்கண்ட தகவல்களை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அ.அன்பு ஆபிரகாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.


மேலும் செய்திகள்