தஞ்சாவூர்
தொழிலாளியின் மனைவிக்கு108 ஆம்புலன்சில் பிரசவம்
|தஞ்சை அருகே பிரசவத்திற்காக அழைத்து வந்த போது தொழிலாளியின் மனைவிக்கு 108 ஆம்புலன்சில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
ஒரத்தநாடு:
நிறைமாத கர்ப்பிணி
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை மேலக்காலனி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். கூலித்தொழிலாளி, இவருடைய மனைவி அஞ்சலிதேவி (வயது 34), நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலிதேவிக்கு நேற்று அதிகாலை சுமார் 2 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை பிரசவத்திற்காக உறவினர்கள் ஒரத்தநாடு அருேக உள்ள தொண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கிருந்து அஞ்சலிதேவியை மேல் சிகிச்சைக்காக, தஞ்சையில் உள்ள அரசு ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து, அஞ்சலிதேவி ஆலத்தூரில் இருந்து வந்த 108 ஆம்புலன்சு மூலம் தஞ்சைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில், தஞ்சை செல்லும் வழியில் அவருக்கு பிரசவ வலி அதிகமானது.
பெண் குழந்தை பிறந்தது
இதையடுத்து டிரைவர் முரளி சாலையோரம் ஆம்புலன்சை நிறுத்தினார். இதனைத் தொடர்ந்து அவசர கால மருத்துவ உதவியாளர் சிதம்பரகண்ணன், அஞ்சலி தேவிக்கு பிரசவம் பார்த்தார். இதில் அஞ்சலி தேவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், மீண்டும் ஆம்புலன்சு மூலம் தாயும், சேயும் தொண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். உரிய நேரத்தில் பிரசவம் பார்த்து தாயையும், குழந்தையையும் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு உறவினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.