< Back
மாநில செய்திகள்
தொழிலாளியின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தொழிலாளியின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள்

தினத்தந்தி
|
17 Oct 2023 11:01 PM IST

வேப்பந்தட்டை அருகே காய்கறி கடை தொழிலாளியின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பிறந்தது. அவர்கள் குழந்தைகளை வளர்த்து, படிக்க வைக்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, மங்களமேடு மாரியம்மன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் நல்லப்பன்(வயது 35). இவர் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் காய்கறி கடை ஒன்றில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், கல்பாடி எறையூர் கிராமத்தை சேர்ந்த சம்பூரணத்துக்கும்(24) கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந்தேதி திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 3 வயதில் தில்சன் என்கிற மகன் உள்ளான். இதையடுத்து மீண்டும் சம்பூரணம் கர்ப்பமடைந்தார்.

ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள்

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சம்பூரணத்துக்கு கடந்த 4-ந்தேதி பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஒரே பிரசவத்தில் 3 அழகான ஆண் குழந்தைகள் பிறந்தது. தற்போது தாயும்-குழந்தைகளும் நலமாக உள்ளனர். இந்த நிலையில் நல்லப்பன்-சம்பூரணம் தம்பதியினர் 3 ஆண் குழந்தைகளை தூக்கிக்கொண்டு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் வந்தனர். அப்போது நல்லப்பன் கூறுகையில், எனது மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தது மகிழ்ச்சியாக தான் உள்ளது. ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருக்கும் பட்சத்தில், தற்போது மேலும் 3 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது.

கலெக்டரிடம் கோரிக்கை

நான் காய்கறி கடைக்கு தினக்கூலி வேலைக்கு சென்று வருகின்றேன். அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குழந்தைகளை வளர்த்து, படிக்க வைப்பது கஷ்டம். எனவே குழந்தைகளை வளர்த்து, படிக்க வைக்கவும், எனக்கு ஏதாவது தொழில் தொடங்க அல்லது கறவை மாடு வாங்க கடனுதவி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். பின்னர் அவர்கள் கலெக்டர் கற்பகத்தை சந்தித்து கோரிக்கையை தெரிவித்தனர். கலெக்டரும் அந்த 3 குழந்தைகளையும் கொஞ்சியவாறு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்