சென்னை
தைலம் தேய்த்து விடுவதுபோல் நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் நகை `அபேஸ்' - பெண்ணுக்கு போலீஸ் வலை
|மதுரவாயலில் தைலம் தேய்த்து விடுவதுபோல் நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் நகை `அபேஸ்' செய்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மதுரவாயல் அய்யாவு நகர் பகுதியை சேர்ந்தவர் பெத்தம்மா (வயது 90). நேற்று இவரது வீட்டிற்கு வந்த 40 வயதுடைய பெண் ஒருவர் பக்கத்து வீட்டில் வசித்து வருவதாகவும், வயதான தங்களுக்கு உடல் வலிக்கு தைலம் தேய்த்து விடுவதாக கூறி பேச்சு கொடுத்துள்ளார். மூதாட்டியும் சம்மதம் தெரிவித்ததால் அந்த பெண்மணி, மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் நகையை கழற்றி வைத்து விட்டு தைலம் தேய்த்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த பெண் சங்கிலியை மூதாட்டி கழுத்தில் மாட்டிவிட்டு சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து தான் கழுத்தில் அணிந்து இருப்பது போலியான நகை என மூதாட்டிக்கு தெரியவந்ததையடுத்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, 3 பவுன் நகையை பறித்து சென்ற பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.