< Back
மாநில செய்திகள்
விபத்தில் பலியானவர் குடும்பத்துக்குநஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
ஈரோடு
மாநில செய்திகள்

விபத்தில் பலியானவர் குடும்பத்துக்குநஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

தினத்தந்தி
|
26 April 2023 10:11 PM GMT

விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

பெருந்துறை

பெருந்துறை சீனாபுரத்தை சேர்ந்த சிதம்பரம் (வயது 35) என்பவர் கடந்த 25-02-2013 அன்று பெருந்துறை-கோவை ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் மோதி பலியானார். இதைத்தொடர்ந்து சிதம்பரத்தின் குடும்பத்தினர் நஷ்ட ஈடு கேட்டு பெருந்துறை சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, சிதம்பரத்தின் குடும்பத்துக்கு நஷ்டஈடாக ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்து 400-யை கோவை அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என்று கடந்த 26-2-2015 அன்று தீர்ப்பு கூறியது.

இதையடுத்து சிதம்பரத்தின் குடும்பத்தினர் கூடுதல் தொகை கேட்டு் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு மனுதாரருக்கு ரூ.14 லட்சத்து 73 ஆயிரத்து 600-யை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று, கடந்த 10-12-2021 அன்று கூறியது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் கடந்த மாதம் வரை வழங்கவில்லை. இதையடுத்து, சிதம்பரத்தின் குடும்பத்தினர், இதுகுறித்து பெருந்துறை சப்-கோர்ட்டில் மீண்டும் முறையீடு செய்தனர்.

அந்த மனுவின் மீது விசாரணை நடத்திய நீதிபதி, ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கிய நாளிலிருந்து 31-3-2023 அன்று வரைக்கும், வட்டியுடன் சேர்த்து, ரூ.23 லட்சத்து 79 ஆயிரத்து 844-யை மனுதாரருக்கு உடனடியாக. அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈட்டு தொகையை வழங்கவில்லை. இதுகுறித்து, மனுதாரர் சார்பில், பெருந்துறை சப்-கோர்ட்டுக்கு மீண்டும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், அரசு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்ய, பெருந்துறை சப்-கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில், பெருந்துறை பஸ் நிலையத்துக்கு வந்த அரசு பஸ்சை பெருந்துறை சப்-கோர்ட்டு அமீனா நேற்று ஜப்தி செய்து, கோர்ட்டு முன்பு நிறுத்தினார்.

மேலும் செய்திகள்