< Back
மாநில செய்திகள்
கணினி மையம் நடத்துபவரிடம் ரூ.4 லட்சம் அபேஸ்
வேலூர்
மாநில செய்திகள்

கணினி மையம் நடத்துபவரிடம் ரூ.4 லட்சம் அபேஸ்

தினத்தந்தி
|
22 April 2023 5:04 PM GMT

வேலூரில் பகுதிநேர வேலை தருவதாக கூறி கணினி மையம் நடத்துபவரிடம் ரூ.4 லட்சம் அபேஸ் செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூரில் பகுதிநேர வேலை தருவதாக கூறி கணினி மையம் நடத்துபவரிடம் ரூ.4 லட்சம் அபேஸ் செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகுதிநேர வேலை

வேலூர் கொணவட்டத்தை சேர்ந்த 56 வயது ஆண் ஒருவர் வேலூரில் கணினி மையம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் அவர் செல்போன் மூலம் சமூகவலைதளத்தில் சில தகவல்களை தேடினார். அப்போது அமேசான் நிறுவனத்தில் பகுதிநேர வேலை உள்ளது என்ற ஒரு பதிவை கண்டார். அந்த வேலை பற்றியும், அதற்கான ஊதியம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வதற்காக அதில் குறிப்பிட்டிருந்த இணைப்பான டெலிகிராமிற்கு சென்று பார்வையிட்டார்.

அதில், குறிப்பிட்ட பொருட்களை வாங்கி ஆன்லைனில் விற்பனை செய்தால், அதற்கு அதிகளவு கமிஷன் தொகை கிடைக்கும் என்று மர்மநபர்கள் தகவல் தெரிவித்து உள்ளார். இதனை உண்மை என்று நம்பிய அவர் அந்த இணைப்பில் கேட்கப்பட்டிருந்த பெயர், முகவரி, வங்கி சேமிப்பு கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்துள்ளார்.

ரூ.4 லட்சம் அபேஸ்

தொடர்ந்து கடந்த மாதம் 22-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை பல்வேறு கட்டங்களாக ரூ.4 லட்சத்து 22 ஆயிரத்து 617-க்கு பொருட்களை வாங்கி ஆன்லைனில் விற்பனை செய்துள்ளார். ரூ.4,22,617 மற்றும் அதற்கான கமிஷன் தொகை அவரின் ஆன்லைன் கணக்கில் இருப்பது போன்று காண்பித்துள்ளது.

இதையடுத்து அவர் முதற்கட்டமாக கமிஷன் தொகையை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவரால் அதனை எடுக்க முடியவில்லை. உடனடியாக டெலிகிராமில் இதுகுறித்து குறுந்தகவல் அனுப்பி உள்ளார். அதற்கு மர்மநபர்கள் பதில் அளிக்கவில்லை. அப்போதுதான் அவருக்கு பகுதிநேர வேலை வாய்ப்பு தருவதாக கூறி ரூ.4,22,617-ஐ ஆன்லைனில் மர்மநபர்கள் அபேஸ் செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

போலி செயலிகள்

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஆன்லைனில் பொருட்கள் வாங்கி விற்பனை செய்வது போன்ற செயலிகளை மர்மநபர்கள் போலியாக உருவாக்கி வைத்திருப்பார்கள். அதில் குறிப்பிட்டிருக்கும் பொருட்களுக்கான பணத்தை அவர்கள் தெரிவிக்கும் வங்கிக்கணக்கு அல்லது யு.பி.ஐ. மூலம் செலுத்தி வாங்கினால், சில நாட்களில் அவர்களே அதனை அதிக பணம் கொடுத்து வாங்குவார்கள்.

அதற்கான பணத்தை அவர்கள் புதிதாக உருவாக்கிய கணக்கில் வரவு வைப்பார்கள். அதனை நம்பும் பொதுமக்கள் அடுத்தடுத்து பணம் செலுத்தி பொருட்கள் வாங்கி ஏமாறுகிறார்கள். எனவே பொதுமக்கள் ஆன்லைனில் முழு மற்றும் பகுதிநேர வேலை, பொருட்களை வாங்கி விற்பனை செய்தால் அதிகளவு கமிஷன் கிடைக்கும் என்ற பதிவுகளை நம்பி பணத்தை இழந்து ஏமாற வேண்டாம் என்று கூறினர்.

மேலும் செய்திகள்