தேனி
திருமலாபுரம் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி செயலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
|திருமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி செயலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி தலைவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து கலெக்டர் உத்தரவிட்டார்.
காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில், ஆண்டிப்பட்டி ஒன்றியம் திருமலாபுரம் ஊராட்சி செயலாளரை பணி செய்ய விடாமலும், முறைகேடுகள் செய்யும் வகையிலும் பணியாற்றுவதால் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி செயலாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது திருமலாபுரம் ஊராட்சி தலைவர் மீதும், மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தூண்டுகோலாக இருந்து வரும் ஊரக வளர்ச்சி பிரிவு அதிகாரிகள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தினர். இதையடுத்து இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊராட்சி செயலாளர்கள் இன்று அங்கு திரண்டனர். காலை 10 மணியளவில் அங்கு தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
அதிகாரம் பறிப்பு
போராட்டத்துக்கு மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் வேல்முருகன், மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், ஏற்கனவே வலியுறுத்திய கோரிக்கையின் அடிப்படையில், ஊரக வளர்ச்சிப் பிரிவில் பணியாற்றிய 2 அலுவலர்கள் வேறு இடத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஊராட்சி தலைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆனால் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று செயலாளர்கள் அறிவித்தனர். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து கலெக்டர் முரளிதரன் கவனத்துக்கு திட்ட இயக்குனர் தண்டபாணி கொண்டு சென்றார். அதன்பேரில், திருமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கனிராஜாவின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.
பின்னர் இந்த உத்தரவு நகல் செயலாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. அதன்பிறகு பிற்பகல் 2 மணியளவில் அவர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.