தூத்துக்குடி
கோவில்பட்டியில் தடையில்லா சான்று வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது
|கோவில்பட்டியில் தடையில்லா சான்று வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் தடையில்லா சான்று வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது கார் டிரைவரும் சிக்கினார்.
தடையில்லா சான்று
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகில் உள்ள விமான் நகரைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 64). இவர் தன்னுடைய மனைவி சந்திராவதிக்கு சொந்தமான 36 சென்ட் நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்காக, தடையில்லா சான்று கேட்டு கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அப்போது தாசில்தார் வசந்த மல்லிகா மற்றும் அவருடைய கார் டிரைவர் கிருஷ்ணன் ஆகியோர் ராஜாராமிடம் தடையில்லா சான்று வழங்குவதற்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ராஜாராம் ரூ.30 ஆயிரம் தருவதாக கூறியதாக தெரிகிறது.
லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்
எனினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜாராம், இதுகுறித்து தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு பீட்டர் பால்துரையிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில், ரசாயன மை தடவிய ரூ.30 ஆயிரத்தை ராஜாராம் நேற்று மதியம் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றார்.
அங்கு தாசில்தார் அறையில் இருந்த வசந்த மல்லிகாவிடம் ரூ.30 ஆயிரத்தை ராஜாராம் வழங்கினார். அந்த பணத்தை வசந்த மல்லகா பெற்று கொண்டார்.
தாசில்தார், டிரைவர் கைது
அப்போது தாலுகா அலுவலக வளாகத்தில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு பீட்டர் பால்துரை, இன்ஸ்பெக்டர்கள் சுதா, அனிதா மற்றும் போலீசார் விரைந்து சென்று, தாசில்தார் வசந்த மல்லிகாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் கிருஷ்ணனையும் கைது செய்தனர்.
கைதான தாசில்தார் வசந்த மல்லிகா கடந்த மே மாதம் 5-ந்தேதிதான் கோவில்பட்டி தாசில்தாராக பொறுப்பு ஏற்றார். இதற்கு முன்பு விளாத்திகுளத்தில் நில எடுப்பு தனி தாசில்தாராக பணியாற்றி வந்தார்.
கோவில்பட்டியில் தடையில்லா சான்று வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் மற்றும் அவரது கார் டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.