திருவாரூர்
பொதுமக்களுக்கு விரைவான சேவை வழங்க வேண்டும்
|கொரடாச்சேரியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, பொதுமக்களுக்கு விரைவான சேவை வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கொரடாச்சேரி:
கொரடாச்சேரியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, பொதுமக்களுக்கு விரைவான சேவை வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
வளர்ச்சி பணிகள்
கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பவித்திரமாணிக்கம் ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் மானியத்துடன் கூடிய எண்ணெய் பிழியும் எந்திரஆலை மற்றும் பெரும்புகளூர் ஊராட்சியில் ரூ.1 லட்சம் மானிய தொகையுடன் அமைக்கப்பட்டுள்ள பண்ணை குட்டை உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து காட்டூர் தொடக்க வேளாண் கடன் சங்கம், அகர திருநல்லூர் ரேஷன் கடை ஆகியவற்றை பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களின் விவரம் குறித்தும், கடையில் வைக்கப்பட்டுள்ள பொருட்களின் இருப்புவிவரம் குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
விரைவான சேவை..
பின்னர் காட்டூர் கால்நடை ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டு, கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலை, கூட்டுறவு மருந்தகம், அங்கு இயங்கிவரும் கூட்டுறவு அச்சகம் ஆகியவற்றையும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டுறவு பண்டக சாலையின் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு பண்டக சாலையின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களுக்கு விரைவான சேவை வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கடன் உதவி
அங்கு இயங்கிவரும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு ரூ.2 லட்சத்திற்கான கடனுதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.
இந்த ஆய்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, வேளாண்மை பொறியியல் துறையின் செயற்பொறியாளர் ரகுநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.