ஈரோடு
ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்கக்கோரிதலைமை செயலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம்
|ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்கக்கோரி தலைமை செயலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்க கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சிதம்பரம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் தசரதராமன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் வரவேற்று பேசினார். இதில் மாநில தலைவர் கதிரேசன் கலந்துகொண்டு பேசினார்.
இந்த கூட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை மீண்டும் வழங்க வேண்டும். அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு கருவூலம் மூலமே ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். கடந்த மே மாதம் வரை ஓய்வுபெற்ற அனைவருக்கும், மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் ஓய்வூதிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், தலைமை செயலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.