நாமக்கல்
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வனத்துறை புதிய ஏற்பாடு
|சேந்தமங்கலம்
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. அந்த மலைப் பகுதியை சுற்றி பார்க்க பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளில் சிலர் கொண்டுவரும் பிளாஸ்டிக் பொருட்களை ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அங்குள்ள வனவிலங்குகள் மற்றும் மண்ணின் தரம் ஆகியவை பாதிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இருந்த போதிலும் மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே போடப்பட்டு வருகிறது. மலைக்கு செல்லும் 70 கொண்டை ஊசி வளைவு பகுதிகளிலிருந்தும் மூட்டை, மூட்டையாக காலி பாட்டில்களை அடிவாரத்தில் உள்ள வனத்துறை அலுவலர்கள் தினமும் வேலையாட்களை கொண்டு சேகரித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அடிவாரப் பகுதியில் ஆய்வுக்கு வந்த நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை மலைச்சாலையில் போடாதவாறு நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்தார். அதன்படி பிளாஸ்டிக் பாட்டிலை கொண்டு செல்லும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து அந்த பாட்டிலை வாங்கி அதில் வனத்துறையினர் ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர். அப்போது அவர்களிடம் ரூ.10 கட்டணமாக வசூலிக்கின்றனர். அதையடுத்து அவர்கள் திரும்ப வரும்போது காலியான பாட்டிலை திரும்ப கொடுக்கும் போது ஏற்கனவே வசூலித்த ரூ.10 பணத்தை திருப்பி வழங்குகின்றனர். அந்தத் திட்டம் நேற்று முதல் கொல்லிமலை அடிவாரத்தில் இருந்து செயல்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் வனச்சரகர் பெருமாள், சேந்தமங்கலம் பிரிவு வனவர் விஜய பாரதி, வனக்காப்பாளர்கள் கோதண்டராமன், பிரவீன் ஆகியோர் உடன் இருந்தனர்.