< Back
மாநில செய்திகள்
கொக்கிலமேடு பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் ரூ.9 கோடியில் கருங்கற்கள் கொட்டி தடுப்பு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கொக்கிலமேடு பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் ரூ.9 கோடியில் கருங்கற்கள் கொட்டி தடுப்பு

தினத்தந்தி
|
22 Oct 2023 6:26 PM IST

கொக்கிலமேடு பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் ரூ.9 கோடியில் கருங்கற்கள் கொட்டி தடுப்பு அமைக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்துள்ள கொக்கிலமேடு மீனவர் குப்பத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் படகு மூலம் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு கடல் அரிப்பு காரணமாக படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்டவைகளை வைக்க இடம் இல்லாததால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், மேலும் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தங்கள் மீனவர் பகுதியில் கருங்கற்கள் மூலம் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து தமிழக அரசு கொக்கிலமேடு மீனவர் பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தது. இதையடுத்து கொக்கிலமேடு கடற்கரையில் தற்போது கரைப்பகுதியில் இருந்து 60 மீட்டர் தூரத்திற்கு கடலில் தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் பகுதியில் உள்ள கல் குவாரியில் இருந்து லாரி, லாரியாக ராட்சத கருங்கற்கள், கொக்கிலமேடு கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு எந்திரங்கள் உதவியுடன் கடலில் கொட்டப்பட்டு வருகிறது.

கடலில் கற்கள் மூலம் பாதை அமைக்கப்பட்டு அதன் வழியாக லாரி சென்று நேர்கல் தடுப்பு கற்கள் கொட்டப்பட்டு வருகிறது. முன்னதாக குவாரியில் இருந்து லாரி மூலம் கொண்டு வரப்படும் கருங்கற்கள் எடை சரியாக உள்ளதா என கண்காணிக்க கொக்கிலமேடு நுழைவு வாயிலில் எடை மேடை அமைக்கப்பட்டுள்ளது.

லாரியுடன் உள்ள கற்கள் எடை அளவு சரிபார்த்த பிறகே லாரிகள் கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதி கடற்கரையில் 5 இடங்களில் நேர்கல் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருவதால் இனி அங்கு கடல் சீற்றம் தணிந்து, கடல் அரிப்பு ஏற்படாத வகையில் இந்த நேர்கல் தடுப்பு வழிவகை செய்யும் என்று அந்த பகுதி மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்