திருவள்ளூர்
திருத்தணியில் பூங்கா, உடற்பயிற்சி கூடத்தை பராமரிக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
|திருத்தணியில் பூங்கா, உடற்பயிற்சி கூடத்தை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மோட்டூர் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு ஊரக வளர்ச்சி துறை தாய் திட்டம் மூலம் ரூ.30 லட்சத்தில் அம்மா சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் நன்றாக பயன்பட்டு வந்த இந்த பூங்கா நாளடைவில் முறையான பராமரிப்பின்றி இதில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகிறது.
இங்கு இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள இரும்பு உபகரணங்கள் மட்டுமின்றி, சிறுவர்கள் விளையாடவும் ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த விளையாட்டு மைதானத்தை முறையாக பராமரிக்காமல் கிடப்பில் போடபட்டது. இதனால் உடற்பயிற்சி உபகரணங்கள், சிறுவர்கள் விளையாடுவதற்காக போடப்பட்ட உபகரணங்களும் சிதிலமடைந்து போனது. தற்போது அந்த விளையாட்டு மைதானம் எந்தவித பயன்பாடும் இல்லாமல் பயனற்று கிடக்கிறது. பூங்காவில் உள்ள விளையாட்டு மைதானம், புதர்கள் சூழ்ந்துள்ளது. தற்போது அந்த பகுதியில் விஷ ஜந்துக்கள் உலா வரும் இடமாக உள்ளது.
எனவே சேதமடைந்து கவனிப்பாரின்றி கிடக்கும் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை உடனடியாக சீரமைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.