நாகப்பட்டினம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், கதறி அழுத கர்ப்பிணி
|இலங்கை அரசு சிறைப்பிடித்த படகுகளை மீட்டுத்தரக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், கர்ப்பிணி கதறி அழுதார்.
நாகப்பட்டினம்:
இலங்கை அரசு சிறைப்பிடித்த படகுகளை மீட்டுத்தரக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், கர்ப்பிணி கதறி அழுதார்.
தூர்வாரும் பணி
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கருவேலங்கடை பகுதியில் கல்லாறு வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அப்போது அவரை சந்தித்து கோரிக்கை மனுக்கள் வழங்க விவசாயிகள், மீனவர்கள் உள்பட பலர் காத்திருந்தனர். தூர்வாரிய பணிகளை பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் வந்த காரில் ஏறி புறப்பட்டார்.
கதறி அழுத கர்ப்பிணி
அப்போது அங்கு காத்திருந்த கர்ப்பிணி ஒருவர், முதல்-அமைச்சரை சந்திக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை அனுமதிக்கவில்லை. தொடர்ந்து அந்த கர்ப்பிணி, போலீசாரிடம் மண்டியிட்டு கதறி அழுதார்.
அதை பார்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனே காரை நிறுத்தி விட்டு அந்த கர்ப்பிணியை அழைத்து பேசினார்.
அப்போது அந்த கர்ப்பிணி கூறியதாவது:-
படகுகள் சிறைபிடிப்பு
எனது பெயர் ஐஸ்வர்யா. நான் கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தில் வசித்து வருகிறேன். கடந்த பிப்ரவரி மாதம் மீன்பிடிக்க சென்ற எனது கணவரின் விசைப்படகு உள்பட அக்கரைப்பேட்டையை சேர்ந்த 4 மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவித்திருந்தாலும், படகுகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. அந்த விசைப்படகு ரூ.1 கோடி வரை கடன் வாங்கி கட்டப்பட்டது. எங்களது படகை சிறைபிடித்து சென்றதால் தற்போது குழந்தைகளை படிக்க வைக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வருகிற 14-ந் தேதியுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைய உள்ளது. ஆனால் படகுகள் இல்லாததால் மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்ட விசைப்படகுகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நடவடிக்கை
இதையடுத்து அந்த கர்ப்பிணி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவை வழங்கினார். கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர், இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
-------