ஈரோடு
ஈரோட்டுக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்வு
|ஈரோட்டுக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்து நேற்று ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை ஆனது.
ஈரோட்டுக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்து நேற்று ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை ஆனது.
விளைச்சல் பாதிப்பு
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கு மேற்பட்ட காய்கறி கடைகளும், 200-க்கும் மேற்பட்ட பழக்கடைகளும் செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கி உள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 7 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. தற்போது விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதால் நேற்று 2 ஆயிரத்து 500 தக்காளி பெட்டிகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. ஆந்திரா மாநிலம் குப்பம், கர்நாடக மாநிலம் கொள்ளேகால் ஆகிய பகுதியில் இருந்து ஈரோட்டுக்கு தக்காளி விற்பனைக்கு வந்தது.
தக்காளி விலை உயர்வு
கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனையானது. இந்த விலை படிப்படியாக உயர்ந்து கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.35-க்கு விற்பனை ஆனது. நேற்று மேலும் விலை உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.40 முதல் 50 வரை விற்பனையானது. இதனால் பொதுமக்கள் ¼ கிலோ ½ கிலோ என வாங்கிச்சென்றனர். தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
கத்திரிக்காய் -ரூ.60, வெண்டைக்காய் - ரூ.40, பீர்க்கங்காய் -ரூ.60, பாகற்காய் -ரூ.60, முள்ளங்கி -ரூ.50, முட்டைகோஸ் -ரூ.25, புடலங்காய் -ரூ.45, அவரைக்காய் -ரூ.110, உருளைக்கிழங்கு -ரூ.30, குடைமிளகாய் - ரூ.60, பச்சை மிளகாய் -ரூ.120, சுரைக்காய்- ரூ.15, இஞ்சி -ரூ.220, பீட்ரூட் -ரூ.55, கேரட் - ரூ.85, காலிபிளவர் -ரூ.35, கோவைக்காய் -ரூ.55, வெள்ளரிக்காய் -ரூ.50, சேனைக்கிழங்கு -ரூ.50, கருணைக்கிழங்கு -ரூ.60, சவ்சவ் -ரூ.25, சின்ன வெங்காயம் -ரூ.60 முதல் ரூ.70 வரை, பெரிய வெங்காயம் -ரூ.25.