< Back
மாநில செய்திகள்
பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: பள்ளிகளுக்கு, கல்வித்துறை உத்தரவு
மாநில செய்திகள்

பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: பள்ளிகளுக்கு, கல்வித்துறை உத்தரவு

தினத்தந்தி
|
30 May 2023 9:12 PM IST

ஒரு வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

2023-24-ம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு, கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த திறப்பு தேதியை மாற்றி, வருகிற 7-ந்தேதி 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.

பள்ளிகள் திறப்புக்கு இன்னும் ஒரு வார காலம் இருக்கும் நிலையில், பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பது உள்பட சில வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* புதர்கள் மற்றும் குப்பைகளின்றி காண்பதற்கு அழகாகவும், தூய்மையாகவும் இருக்கும் வகையில் பள்ளி வளாகம் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, சமையலறை மற்றும் கழிப்பறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதையும் உறுதி செய்திடவேண்டும்.

* திறந்தவெளி கிணறுகள் இருந்தால் பள்ளி தொடங்குவதற்கு முன்பே மூடப்பட வேண்டும். கழிவுநீர் தொட்டிகள் மூடப்பட்டு பாதுகாப்புடன் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

* பள்ளியின் அனைத்து இடங்களும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணாக்கர்கள் பயன்பாட்டிற்கான குடிநீர் தொட்டி மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து, பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும்.

* ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைத்து வகையிலும் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்புக்கு முழு பொறுப்பு வாய்ந்தவர்கள் ஆவர். பள்ளியில் உள்ள மின்சாதனங்கள், சுவிட்சுகள் சரியாக செயல்படுகின்றனவா? என்பதையும் இவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

* மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை பள்ளி திறந்தநாள் முதலே நடத்தப்பட வேண்டும்.

* பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் வழங்கப்பட வேண்டும். அதே போல், நோட்டுப்புத்தகங்கள், சீருடைகள், அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி குறித்த நேரத்துக்கு வழங்கப்படுவதை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

* மேலும் கல்வி செயல்பாடுகள், கல்வி இணை செயல்பாடுகள், கல்வி சாரா செயல்பாடுகள், பள்ளி கால அட்டவணை, நாட்காட்டியை பின்பற்றுதல் உள்பட பல்வேறு விஷயங்கள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்