< Back
மாநில செய்திகள்
ஆவின் அலுவலகத்தில் மீண்டும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்:பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மனு
தேனி
மாநில செய்திகள்

ஆவின் அலுவலகத்தில் மீண்டும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்:பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மனு

தினத்தந்தி
|
22 March 2023 12:15 AM IST

தேனி அருகே ஆவின் அலுவலகத்தில் மீண்டும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மனு கொடுத்தனர்.

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். நேற்று அவர்கள் மனு கொடுப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் ஷஜீவனாவிடம் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில், நாங்கள் அனைவரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் (ஆவின்) கட்டுப்பாட்டில் இயங்கிவரும் தேனி, மதுரை, நாமக்கல், விருதுநகர், திருப்பூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் முறையாக அறிவிப்பாணை பேரில் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு செய்யப்பட்டு, 2 வருடங்களாக பல்வேறு பணிநிலைகளில் பணிபுரிந்து வருகிறோம்.

இந்நிலையில் கடந்த 06.01.2023 அன்று எந்தவித முன்னறிவிப்பு கடிதமும் வழங்காமல் மேற்கூறிய ஒன்றியங்களில் பணியாற்றி வந்த 201 பணியாளர்களை திடீரென செயல்முறை ஆணை வழங்கி எங்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டனர். இந்நிலையில் பணிநியமனத்தில் முறைகேடு இருப்பதாக தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 81-ன் கீழ் விசாரனை நடத்தப்பட்டு அதன் அறிக்கையினை ஒவ்வொரு ஒன்றியங்களின் நிர்வாககுழுவிற்கு சமர்ப்பிக்கப்படாமலும் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பு கடிதம் வழங்காமலும் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டனர். நாங்கள் சென்னை ஐகோர்ட்டை நாடினோம். கோர்ட்டு உத்தரவுப்படி பணியில் சேர விண்ணப்பித்தோம். ஆனால் இதுநாள் வரை எங்களை மீண்டும் எங்கள் ஒன்றியத்தில் பணிபுரிந்திட அனுமதிக்காமல் இருக்கின்றனர். எங்கள் அனைவரையும் தேனி ஒன்றியத்தில் மீண்டும் பணிபுரிந்திட அரசுக்கு ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று கூறியிருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்