மதுரை
உள்துறை அமைச்சகம் கேட்ட கேள்விக்கு தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது
|நீட் தேர்வு விலக்கு குறித்து உள்துறை அமைச்சகம் கேள்விக்கு தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருமங்கலம்,
நீட் தேர்வு விலக்கு குறித்து உள்துறை அமைச்சகம் கேள்விக்கு தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அமைச்சர் ஆய்வு
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது இந்த ஓமியோபதி கல்லூரியில் 300 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 7 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்லூரி அமைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டதால் கல்லூரி தாழ்வான பகுதியாகி விட்டது. இதனால் மழைக்காலங்களில் மாதக்கணக்கில் மழைநீர் தேங்கி நிற்கிறது. கல்லூரி கட்டிடங்கள், வகுப்பறைகள், ஆய்வகம் ஆகியவை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதை சரி செய்ய நகராட்சி நிர்வாகத்தினர் இப்பகுதியில் கால்வாய் அமைத்து அதை குண்டாற்றுடன் இணைத்து விட்டால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளனர். அதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.
கலெக்டர் தலைமையில் குழு
இதனை மீறி மழை காலங்களில் தண்ணீர் தேங்குமா? என ஆய்வு செய்வதற்காக, கலெக்டர் தலைமையில் தியாகராஜர் பொறியியல் கல்லூரியை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு 10 தினங்களுக்குள் இந்த இடத்தில் ஆய்வு நடத்த உள்ளனர். ஆய்வறிக்கையின்படி மழை காலங்களில் தண்ணீர் தேங்கி கட்டிடத்திற்கு சேதம் ஏற்படும் என தெரிய வந்தால், புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்படும். இதற்கு கல்லூரி நிர்வாகம் மாணவப் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்பினர் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் பெற்று இந்த முடிவு செய்யப்படும். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் படி ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிட வளாகம் கட்டப்படும். அந்தப் பணிகள் நிறைவடைய சுமார் 2 ஆண்டுகள் ஆகும். அதுவரை கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் அருகே உள்ள விருதுநகர் மற்றும் திண்டுக்கல் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இடம் கேட்க இந்திய மருத்துவ கவுன்சில் ஆணையாளரின் அனுமதி பெறும்படி வலியுறுத்தியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீட் தேர்வு
நீட் தேர்வு குறித்த கேள்விக்கு தமிழக அரசு நீட் தேர்வு விலக்கில் உறுதியாக உள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில கேள்விகளை கேட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு உள்ளதா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு எங்கும் கிடையாது. இது தவறான குற்றச்சாட்டு என தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது கலெக்டர் அனிஷ்சேகர், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், நகராட்சி சேர்மன் ரம்யா முத்துக்குமார், துணை சேர்மன் ஆதவன் அதியமான், நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி கவுன்சிலர்கள் திருக்குமார், கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.