சாதி சான்றிதழை சரி பார்க்க டி.என்.பி.எஸ்.சி.க்கு அதிகாரம் இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு
|சாதிச் சான்றிதழின உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) 1996-97 - ம் ஆண்டுகளில் நடத்திய குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று ஜெயராணி என்பவர், இளநிலை உதவியாளர் நியமிக்கப்பட்டார். கணவரை இழந்த இவர், கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறி, எஸ்.சி., சாதிச் சான்றிதழ் பெற்றிருந்தார்.
பணி நியமனத்துக்கு கணவர் பெயரில் சமர்ப்பித்த சாதிச் சான்றுக்கு பதில், தந்தை பெயரில் பெற்ற சாதிச் சான்றை சமர்ப்பிக்கும்படி, டி.என்.பி.எஸ்.சி., உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து ஜெயராணி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, தகுதியான அதிகாரி வழங்கிய சாதிச் சான்றிதழ் செல்லத்தக்கது என்றும், தந்தை பெயரில் பெற்ற சாதி சான்றிதழை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட டி.என்.பி.எஸ்.சி. க்கு அதிகாரம் இல்லை என்றும் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து டி.என்.பி.எஸ்.சி. தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், திலகவதி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
எஸ்சி., சாதிச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களுக்கே அதிகாரம் உள்ளது. சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய டி.என்.பி.எஸ்.சி.க்கு அதிகார வரம்பு இல்லை. எனவே, தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறோம். அதேசமயம், ஜெயராணியின் சாதிச் சான்றிதழை சரிபார்க்கும்படி மாவட்ட குழுவுக்கு, அரசு கருவூல கணக்கு துறை ஆணையர் அனுப்ப வேண்டும் .
அதன் மீது விசாரணை நடத்தி 6 மாதங்களில் உரிய முடிவை மாவட்டத்தில் குழு எடுக்க வேண்டும். இந்த குழுவின் விசாரணையில் ஆஜராகி, தனது தரப்பு விளக்கத்தை ஜெயராணி வழங்கலாம்.
இவ்வாறு கூறியுள்ளனர்.