< Back
மாநில செய்திகள்
இந்த மாத இறுதிக்குள் குரூப்-4 தேர்வு முடிவு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
மாநில செய்திகள்

இந்த மாத இறுதிக்குள் குரூப்-4 தேர்வு முடிவு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தினத்தந்தி
|
10 March 2023 5:26 AM IST

குரூப்-4 தேர்வு முடிவு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கிறது.

சென்னை,

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.), இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர், வரைவாளர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டு, அதற்கான தேர்வை கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந்தேதி நடத்தி முடித்தது. இந்த தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் எழுதினார்கள்.

இதற்கான தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில், தேர்வை எழுதிய தேர்வர்கள் காத்திருக்கின்றனர். தேர்வை நடத்திய டி.என்.பி.எஸ்.சி. இதுவரை கடந்த அக்டோபர், டிசம்பர், பிப்ரவரி என 3 முறை தேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால் தேர்வு முடிவு வெளியிடப்படவே இல்லை. 4-வது முறையாக மார்ச் மாதத்துக்குள் (இந்த மாதம்) வெளியிடப்படும் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளது.

செய்தி எதிரொலி

இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளனர். தேர்வை சந்தித்ததைவிட, தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்புதான் பெரிய அளவில் பாதிப்பை தருவதாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குரூப்-4 தேர்வு முடிவை வெளியிடக்கோரி டுவிட்டரில் ஹேஷ்டேக் செய்தனர். இதுகுறித்த செய்தியை 'தினத்தந்தி' படத்துடன் செய்தியாக வெளியிட்டது.

இதன் எதிரொலியாக டி.என்.பி.எஸ்.சி. இதுதொடர்பாக நேற்று ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப்-4-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வினை கடந்த 24.7.2022 அன்று நடத்தியது. இந்த தேர்வின் முடிவுகள் குறித்து தேர்வாணையத்தால் 14.2.2023 அன்று வெளியிடப்பட்ட விரிவான செய்திக்குறிப்பில் தெரிவித்ததன்படி, தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தில் துரிதமாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று மீண்டும் தேர்வர்களின் கனிவான தகவலுக்காக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்