டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: கட் ஆப் குறையுமா..?
|குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் 2,208 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 9 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர். இந்த சூழலில் ஜூன் 19 ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குரூப் 4 தேர்வு முடிவுகள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் அறிவித்திருந்தது.
இதற்கிடையில், குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன்மூலம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 724 ஆக அதிகரித்தது. ஆனால் இந்த எண்ணிக்கை போதுமானது அல்ல என தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் குரூப் 4 தேர்வு காலிப் பணியிடங்களை அதிகரிப்பதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், அக்டோபர் மாதத்தின் முதல் அல்லது 2வது வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. தகவல் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று (அக்.9-ம் தேதி) மேலும் 2 ஆயிரத்து 208 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 932 ஆக அதிகரித்துள்ளது.
கட் -ஆப் மதிப்பெண்கள் என்னவாகும்..?
காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், தேவையான கட்-ஆப் மதிப்பெண்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குரூப் 4 தேர்வு, எழுத்துத் தேர்வை அடிப்படையாகக் கொண்டது. நேர்காணல் கிடையாது. எழுத்து தேர்வின் அடிப்படையில் மட்டும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே, இத்தேர்வை எழுதுபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் உள்ளது. அரசு பணியில் சேர வேண்டும் என்ற வேட்கையோடு தயாராகி வரும் இளைஞர்களுக்கு குரூப் 4 தேர்வு என்பது முதற்கட்ட நுழைவாக உள்ளது.
குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பணியில் சேர்ந்த பின்னர், அடுத்தத்தடுத்து துறை சாரந்த தேர்வுகள் எழுதி மேற்பதவிகளுக்கு செல்ல முடியும். மேலும், குரூப் 4 தேர்வில் பெரும்பாலான பதவிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி என்பது மட்டுமே கல்வித்தகுதியாக இருப்பதினால் தமிழகம் முழுவதும் இத்தேர்வை தவறாமல் இளைஞர்கள் எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.