டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத அனுமதி மறுப்பு; தேர்வு மைய கேட்டை உடைத்து உள்ளே புகுந்த தேர்வர்கள்
|டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் தேர்வு மைய கேட்டை உடைத்து தேர்வர்கள் உள்ளே புகுந்தனர்.
காஞ்சீபுரம்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நேற்று காஞ்சீபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்வர்களுக்கு அதற்கு உண்டான நுழைவு சீட்டு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் காலையில் தேர்வு முடிந்த பிறகு மதியம் 2 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வுக்கு வரும் தேர்வர்கள் 30 நிமிடம் முன்னதாக தேர்வு மையத்தின் உள்ளே செல்ல வேண்டும் என விதிகள் உள்ளது. இதனால் மதியம் 1.30 மணி அளவில் தேர்வு மைய கதவுகள் மூடப்பட்டது. இதனால் தாமதமாக வந்த 50-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தங்களை உள்ளே விட கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கேட்டை உடைத்தனர்
இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென தேர்வர்கள் நுழைவுவாயில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்து தேர்வெழுத தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் குறைவான அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் தேர்வர்களை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் தேர்வு மையத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மைய கண்காணிப்பு அலுவலர் வருகை புரிந்தார். மேலும் சம்பவம் அறிந்து உடனடியாக போலீசார் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் குவிக்கப்பட்டு கேட்டை உடைத்து உள்ளே சென்றவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.