கரூர்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வினை 2,508 பேர் எழுதினர்
|கரூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வினை 2,508 பேர் எழுதினர். 1,660 பேர் தேர்வு எழுத வரவில்லை.
குரூப்-1 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் குரூப்-1 பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கரூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 17 மையங்களில், இத்தேர்வுகளை எழுத 4,168 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில் குரூப்-1 தேர்வுக்கான எழுத்துத்தேர்வு நேற்று காலை நடைபெற்றது.இதனையொட்டி தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு காலை 8 மணி முதல் வரத்தொடங்கினர். பின்னர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு அறையினை ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு பலகையில் பார்வையிட்டு, தேர்வு அறைக்கு சென்றனர். இத்தேர்வினை 2,508 பேர் எழுதினர். 1,660 பேர் தேர்வு எழுதவில்லை.
5 நடமாடும் குழுக்கள்
ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை வழங்க ஏதுவாக 5 நடமாடும் குழுக்களும், அனைத்து தேர்வு மையங்களிலும் பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு தேர்வு மையத்திலும் வீடியோ பதிவு செய்யப்பட்டன.தேர்வு மையங்களுக்குள் தேர்வு எழுதுபவர்களை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர், கழிப்பிட வசதிகள், மின்வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும் செல்போன், கால்குலேட்டர், எலக்ரானிக் வாட்ச் போன்ற மின்னணு சாதனங்கள் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் காலை 9 மணிக்கு மேல் வந்த தேர்வர்களை தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கவில்லை.