அரியலூர்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வினை 2,121 பேர் எழுதினர்
|குரூப்-1 தேர்வினை 2,121 பேர் எழுதினர். 1,156 பேர் தேர்வு எழுதவில்லை.
குரூப்-1 தேர்வு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி-1-ல் (குரூப்-1) துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கான முதல் நிலை தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.
அதன்படி குரூப்-1 தேர்வினை எழுத அரியலூர் மாவட்டத்தில் 3,277 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து 11 மையங்களில் குரூப்-1 தேர்வு நேற்று நடந்தது.
தேர்வு அறைக்குள் தேர்வாளர்களை 9 மணி வரை மைய கண்காணிப்பாளர்கள் அனுமதித்தனர். சரியாக காலை 9.30 மணியளவில் தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரை நடந்தது.
200 கொள்குறி வகை வினாக்கள் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடந்தது.
1,156 பேர் எழுத வரவில்லை
அரியலூர் மாவட்டத்தில் 2,121 பேர் குரூப்-1 தேர்வினை எழுதினர். 1,156 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுத முடியாத மாற்றுத்திறனாளி தேர்வாளர்களுக்கு தேர்வு எழுத உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த தேர்வினை கண்காணிப்பதற்காக துணை கலெக்டர் நிலையில் பறக்கும் படை அலுவலர்களும், இயங்கு குழுக்கள் மற்றும் கண்காணிப்பாளர், உதவியாளர் நிலையில் தேர்வுக்கூட நடைமுறைகளை கண்காணித்திட ஆய்வு அலுவலர்களும் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் வீடியோகிராபர்கள் மூலமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.