சேலம்
சேலத்தில் முதல் முறையாக நாளை டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி-சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சேலம் அணிகள் மோதல்
|சேலம் வாழப்பாடியில் முதல் முறையாக நாளை (செவ்வாய்க்கிழமை) டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சேலம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
வாழப்பாடியில் நாளை போட்டி
6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உள்பட 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. அதை தொடர்ந்து திண்டுக்கல்லில் கடந்த மாதம் 30-ந் தேதி முதல் கடந்த 7-ந் தேதி வரையிலும், அதன்பிறகு கோவையில் கடந்த 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.
அதன் தொடர்ச்சியாக டி.என்.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக சேலத்தில் 7 லீக் போட்டிகளும், வெளியேற்றுதல் ஒரு போட்டியும், முதலாவது தகுதிச்சுற்று போட்டியும் நடைபெறுகிறது. அதன்படி சேலம் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7.15 மணிக்கு தொடங்கும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், உள்ளூர் அணியான சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. அதாவது, முதல் 2 ஆட்டங்களில் தோற்றிருந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, அதன்பிறகு மோதிய அடுத்த 3 ஆட்டங்களிலும் அதிரடியாக விளையாடி தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடியுள்ளது. அந்த வரிசையில் நாளை நடக்கும் போட்டியில் சேலம் அணியுடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மோத உள்ளது.
வீரர்கள் பயிற்சி
வாழப்பாடியில் நாளை நடைபெறும் இந்த போட்டியை 5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அங்கு மைதானத்தை தயார் செய்யும் பணியும் நேற்று மும்முரமாக நடைபெற்றது. சேலத்தில் வருகிற 30-ந் தேதி வரை டி.என்.பி.எல். கிரிக்கெட் நடைபெறுவதால் போட்டிகளில் விளையாடும் மதுரை, திருச்சி அணிகளின் வீரர்கள் நேற்று முன்தினமே சேலத்துக்கு வந்துவிட்டனர். அவர்கள் தனியார் ஓட்டலில் தங்கியுள்ளனர். பின்னர் அவர்கள் இன்று (திங்கட்கிழமை) மைதானத்திற்கு வந்து வலைப்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட உள்ளனர். இந்த ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.