< Back
மாநில செய்திகள்
சென்னை பனையூரில் அண்ணாமலை வீட்டு முன்பு நடப்பட்ட பா.ஜ.க. கொடி கம்பம் அகற்றம்; போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் கைது
மாநில செய்திகள்

சென்னை பனையூரில் அண்ணாமலை வீட்டு முன்பு நடப்பட்ட பா.ஜ.க. கொடி கம்பம் அகற்றம்; போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் கைது

தினத்தந்தி
|
22 Oct 2023 1:35 AM IST

பனையூரில் அண்ணாமலை வீட்டு முன் நடப்பட்ட பா.ஜ.க. கொடி கம்பத்தை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

45 அடி உயர கொடி கம்பம்

தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையின் வீடு, சென்னையை அடுத்த பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் சீஷோர் டவுன் 6-வது அவென்யூவில் உள்ளது. இவரது வீட்டின் முன்பு நேற்று முன்தினம் இரவு பா.ஜ.க.வினர் சுமார் 45 அடி உயரத்துக்கு தங்கள் கட்சியின் கொடி கம்பத்தை அமைத்தனர். எந்தவித அனுமதியும் பெறாமல் கொடி கம்பத்தை அமைத்து உள்ளதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தாம்பரம் போலீஸ் துணை கமிஷனர் பவன்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

கண்ணாடி உடைப்பு

அந்த கொடி கம்பத்தை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதுபற்றி தகவல் அறிந்ததும் பா.ஜ.க. மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாவட்ட தலைவர் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அங்கு குவிந்தனர். கொடி கம்பத்தை அகற்ற கூடாது என கூறி போலீசாருடன் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கொடி கம்பத்தை அகற்ற கிரேன் எந்திரத்தை அங்கு கொண்டு வந்தனர். கரு.நாகராஜன், மீனவரணி மாநில தலைவர் நீலாங்கரை முனுசாமி, மாவட்ட தலைவர் சாய் சத்யன் மற்றும் கட்சியினர் கொடி கம்பத்தை அகற்ற விடாமல் சுற்றி அமர்ந்து கொண்டனர். கிரேன் வாகனத்தின் மீது ஏறிய பா.ஜ.க.வினர் அதன் கண்ணாடிகளை உடைத்தனர். பின்னர் தமிழக அரசு மற்றும் போலீசுக்கு எதிராக கோஷமிட்டனர். கரு.நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் போலீசாரிடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தள்ளுமுள்ளு

இந்த சம்பவம் காரணமாக பனையூரில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அப்போது அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்ட கட்சி கொடி கம்பத்தை போலீசார் அகற்ற சென்றபோது போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஸ்கர் (வயது 44) என்பவர் கீழே விழுந்தார். அவரது கண் புருவத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. பா.ஜ.க. நீலாங்கரை மண்டல தலைவர் மாரிமுத்து என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் காயமடைந்த பாஸ்கர் என்பவர் அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.்

சாலை மறியல்

அதன்பிறகு பா.ஜ.க.வினர் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதாக கரு.நாகராஜன் உள்பட 110 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் பா.ஜ.க. கொடி கம்பம் அங்கிருந்து அகற்றப்பட்டது. இதுகுறித்து கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரேன் வாகன கண்ணாடியை உடைத்த திருவல்லிக்கேணியை சேர்ந்த கன்னியப்பன் (37), பாலமுருகன் (35), பள்ளிக்கரணையை சேர்ந்த செந்தில் குமார் (42), மடிப்பாக்கத்தை சேர்ந்த சுரேந்திரகுமார் (49), நங்கநல்லூரை சேர்ந்த பாலா என்ற வினோத்குமார் (34) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் பா.ஜ.க. விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை போலீசார் தேடி வந்த நிலையில் அக்கரை அருகே அவரையும் கைது செய்தனர்.

இது தொடர்பாக தாம்பரம் மாநகர போலீஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஆபத்தான முறையில்...

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வீட்டு முன்பு பொது இடத்தில் சுமார் 45 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் முன் அனுமதி பெறாமல் பொது மக்களுக்கு இடையூறாகவும், உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு மிக அருகில் உயிருக்கு ஆபத்தான வகையிலும் அமைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில் அனுமதி பெறாமல் ஆபத்தான முறையில் பொது இடத்தில் அமைக்கப்பட்ட கொடி கம்பத்தை சென்னை பெருநகர மாநகராட்சியும், போலீசாரும் அகற்ற முடிவு செய்தது.

இதுபற்றி பா.ஜ.க.வினருக்கு தெரியப்படுத்தி இரவு 8 மணிக்கு போலீசார் உதவியுடன் கொடிகம்பத்தை அகற்ற முற்படும் போது பா.ஜ.க. துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் சுமார் 110 பேர் அரசுக்கு எதிராக கோஷமிட்டு தர்ணா செய்தனர். பலமுறை எச்சரித்தும் கேளாமல் தொடர்ந்து அரசு அலுவலர்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கானத்தூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் கொடிகம்பத்தை அகற்ற கொண்டு வந்த ஜே.சி.பி. எந்திரத்தை கற்களை கொண்டு தாக்கி கண்ணாடிகளை உடைத்து பொது சொத்துக்கு சேதம் விளைவித்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட அமர்பிரசாத் ரெட்டி உள்பட 6 பேரும் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப் பட்டனர் .

மேலும் செய்திகள்