< Back
மாநில செய்திகள்
வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
2 April 2023 5:45 AM IST

வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம் என்று கேரளாவில் நேற்று நடந்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கேரளாவில் தந்தை பெரியாரால் முன்னெடுக்கப்பட்ட வைக்கம் போராட்டம் சமூகநீதிக்கு வித்திட்ட போராட்டம். இதனால் அவர் வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார்.இந்த போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாட கேரள அரசு ஏற்பாடு செய்திருந்தது.

வைக்கம் நூற்றாண்டு தொடக்க விழா

இதன்படி கேரள அரசின் கலாசார துறை சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடக்க விழா கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

விழாவில் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:-

இந்தியாவுக்கு வழிகாட்டிய போராட்டம்

வைக்கம் என்பது இப்போது கேரள மாநிலத்தில் இருந்தாலும், தமிழ்நாட்டுக்கு எழுச்சியை, உணர்ச்சியை ஏற்படுத்திய ஊர். வைக்கத்தில் நடந்த போராட்டம் என்பது கேரளத்தின் சமூகநீதி வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாடு சமூகநீதி வரலாற்றிலும் மகத்தான போராட்டம். இன்னும் சொன்னால் இந்தியாவுக்கு வழிகாட்டிய போராட்டம்.

வைக்கம் போராட்டம்தான் மகர் போராட்டத்தை நடத்துவதற்கு எனக்கு தூண்டுதலாக அமைந்திருந்தது என அம்பேத்கர் பிற்காலத்தில் எழுதினார். வைக்கம் போராட்டத்தின் தூண்டுதலால்தான் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களில் காந்தியடிகள் அதிகம் கவனம் செலுத்தினார்.

தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தை சேர்ந்தவர்கள் கோவில் நுழைவு போராட்டங்களை நடத்துவதற்கான தூண்டுகோலாக இருந்தது வைக்கம் போராட்டம்தான். எனவே சுயமரியாதை, சமூகநீதி போராட்டத்தின் தொடக்கமான வைக்கம் மண்ணில் நிற்பதை நான் பெருமையாக கருதுகிறேன். வெற்றி பெருமிதத்துடன் நான் இங்கே கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன்.

புரட்சி இயக்கத்தை நடத்தியவர்கள்

சூத்திரர்கள் என்றும், பஞ்சமர் என்றும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களை தலைநிமிர வைக்க கேரளத்திலும், தமிழ்நாட்டிலும் சீர்திருத்த இயக்கமானது பல்லாண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இதனை சீர்திருத்த இயக்கமாக மட்டுமே சுருக்கி சொல்லிவிட முடியாது. இவைதான் புரட்சி இயக்கங்கள்.

கேரளாவில் புரட்சி இயக்கம் என்பது நாராயணகுரு, டாக்டர் பல்பு பத்மநாபன், குமாரன்ஆசான், அய்யன்காளி, டி.கே.மாதவன் ஆகிய தலைவர்களால் வரிசையாக நடத்தப்பட்டது. தமிழ்நாட்டு புரட்சி இயக்கமானது ராமலிங்க வள்ளலார், அய்யா வைகுண்டர், அத்திப்பாக்கம் வெங்கடாசலனார், பண்டித அயோத்திதாசர், டி.எம்.நாயர், பெரியார் ஆகிய தலைவர்களால் வரிசையாக நடத்தப்பட்டது.

கேரளாவை சேர்ந்த டி.கே.மாதவன், தமிழகத்தை சேர்ந்த பெரியார் உள்ளிட்டோர் சேர்ந்து நடத்திய வெற்றி போராட்டம்தான் வைக்கம் போராட்டம். ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் வைக்கம் தெருவில் நடந்து செல்ல விதிக்கப்பட்ட தடையை உடைக்க அன்றைய காங்கிரஸ் கட்சி தலைவர்களால் தீண்டாமை ஒழிப்பு குழு தொடங்கப்பட்டது. 1924-ம் ஆண்டு மார்ச் 30-ந்தேதி தடையை மீறி அந்த தெருவுக்குள் நுழைய சத்தியாகிரக போராட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

பேசத்தடை

அந்த நேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியாருக்கு கேரள தலைவர்கள் கடிதம் எழுதினர். நீங்கள் வந்து இந்த போராட்டத்திற்கு உயிரூட்ட வேண்டும் என கடிதத்தில் எழுதியிருந்தது. உடனடியாக பெரியார் கேரளாவுக்கு வந்து விட்டார்.

பெரியார், கேரளா முழுவதும் பரப்புரை செய்தார். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதனாலேயே பெரியாரையும், கோவை அய்யாமுத்துவையும் கூட்டத்தில் பேசுவதற்கு தடை விதித்தனர். ஆனால் தடையை மீறி பேசியதற்கு பெரியாைர கைது செய்து சிறையில் அடைத்தனர். விடுதலை செய்யப்பட்ட பிறகு நேராக ஊருக்கு திரும்பாமல் வைக்கம் சென்று மீண்டும் போராடினார். அவரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெரியார் மனைவி நாகம்மையார் மற்றும் அவருடைய சகோதரி கண்ணம்மாளும் இங்கு வந்து போராடினர். வைக்கம் போராட்டத்துக்காக பெரியார் 74 நாட்கள் சிறையில் இருந்தார். 67 நாட்கள் கேரளாவில் தங்கி போராடினார். மொத்தம் 141 நாட்கள் கேரளாவில் இருந்து வைக்கம் போராட்டத்திற்காக பெரியார் ஒப்படைத்துக்கொண்டார்.

கோவில் சாலைகள் திறப்பு

வைக்கம் போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் என்ற அடிப்படையில் அண்ணல் காந்தியடிகளை ராணி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இந்த போராட்டத்திற்கு தலைமை வகித்தவர் என்ற அடிப்படையில் பெரியாருடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டுதான் காந்தியடிகள் ராணியிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றார்.

கோவிலுக்குள் நுழைவோம் என்று ஈ.வெ.ராமசாமி சொல்வதை நிறுத்த வேண்டும். தெருவை திறந்து விடுகிறோம் என்று ராணி சொல்ல, அதனை பெரியாரிடம் வந்து காந்தியடிகள் கூறினார். நமது இறுதி இலக்கு கோவிலுக்குள் நுழைவதுதான் என்றாலும் இப்போதைக்கு முதற்கட்ட வெற்றியை பெறுவோம் என சொன்னார். அதன் அடிப்படையில் வைக்கம் கோவில் சாலைகள் அனைவருக்கும் திறந்து விடப்பட்டது.

தலைவர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

இதன் வெற்றி விழா வைக்கத்தில் நடந்த போதும் பெரியாரை மறக்காமல் அழைத்து பாராட்டினார்கள் கேரள தலைவர்கள். அந்த வகையில் 100 ஆண்டுகள் கழித்தும் தமிழ்நாட்டை மறக்காமல் எங்களை அழைத்துள்ளார் கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன்.

வைக்கம் பொன் விழாவானது 1975-ம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் நடந்தது. திராவிட கழக தலைவர் மணியம்மையார், பொதுசெயலாளர் வீரமணி ஆகியோர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 1985-ம் ஆண்டு வைக்கத்தில் பெரியாருக்கு நினைவு சின்னம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்த விழாவில் அன்றைக்கு தமிழ்நாட்டின் நிதி அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் கலந்து கொண்டார். தந்தை பெரியாரின் புரட்சிமொழிகள் அப்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது. அதன்தொடர்ச்சியாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மிக, மிக பொருத்தமானது. தமிழ்நாடு, கேரள தலைவர்கள் சேர்ந்து போராடிய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை இன்றைக்கு நாம் கொண்டாடுகிறோம்.

சிறை வளாகத்தில் பெரியாருக்கு நினைவகம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைக்கம் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்க விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை நான் அளித்தேன். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசின் சார்பில் செய்ய இருப்பதாக நான் சொல்லி இருக்கிறேன்.

பெரியார் நினைவகம் சீரமைக்க ரூ.8 கோடியே 11 லட்சம் நிதி ஒதுக்கப்பட இருக்கிறது. பெரியார் சிறை வைக்கப்பட்ட அருவிக்குத்து சிறை வளாகத்தில் புதிய நினைவகம் அமைக்கவும் தமிழ்நாடு அரசு நினைக்கிறது. இதுதொடர்பாக உரிய முறையான அனுமதி கடிதத்தை கேரள அரசுக்கு விரைவில் நாங்கள் அனுப்பி வைப்போம்.

தமிழ்நாட்டில் பிறந்து விட்டதால் பெரியார் தமிழர்களுக்கான தலைவர் மட்டுமல்ல, இந்தியாவுக்கான தலைவர் மட்டுமல்ல உலகத்திற்கான பொதுவான தலைவர்.

ஒற்றுமையுடன் போராட வேண்டும்

எத்தகைய சனாதனத்து காலத்து போராட்டங்களை கடந்து வந்தோம் என்பதை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச்சொல்லும் பணியை இருமாநில அரசுகளும் செய்ய வேண்டும். மீண்டும் சனாதன, சாதி, மதவாத சக்திகள் கோலோச்ச நினைக்கும் காலத்தில் நமக்கு இந்த கடமை அதிகம் இருக்கிறது.

அதற்கு பெரியார் என்ற பெருவிளக்கு நமக்கு பயன்படும். வைக்கம் போராட்டம் கலங்கரை விளக்காக அமையும். 100 ஆண்டுகளுக்கு முன்னால் எத்தகைய ஒற்றுமையுடன் போராடி இருக்கிறோமோ அதேபோன்று ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு மற்றும் கேரள மந்திரிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுடன் சென்று வைக்கம் வலிய காவலத்தில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் உள்ள மகாத்மாகாந்தி சிலை, பெரியார் உருவ சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகள்