'வடகிழக்கு பருவமழையின்போது கிடைத்த நீரை தமிழக அரசு சேமிக்கவில்லை' - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
|வடகிழக்கு பருவமழை மூலம் கிடைத்த நீரை சேமிக்காததால் இன்று 22 மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை,
மழைநீர் சேமிப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த தவறியதே வறட்சி மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு காரணம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"கடந்த 2 மாத காலமாக வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு வெப்பசலனத்தின் தாக்கம் மக்களை மிகவும் பாதித்துள்ளது.
தமிழக அரசு தற்போதுதான் விழித்துக்கொண்டு 22 மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்பட்டிருப்பதாகவும், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 150 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாகவும் அறிவித்திருப்பது, தும்பை விட்டு வாலைப் பிடிக்கின்ற செயல்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் நமக்கு வடகிழக்கு பருவமழை மூலம் கிடைத்த தண்ணீர் எங்கே போனது? அவற்றை சேமித்து வைக்காததால் இன்று 22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் தமிழக அரசுதான்."
இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.