< Back
மாநில செய்திகள்
ஏற்றமிகு தமிழ்நாடு என்று அழைக்கும் நிலையை உருவாக்க எந்நாளும் உழைப்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மாநில செய்திகள்

ஏற்றமிகு தமிழ்நாடு என்று அழைக்கும் நிலையை உருவாக்க எந்நாளும் உழைப்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தினத்தந்தி
|
1 March 2023 3:05 AM IST

ஏற்றமிகு தமிழ்நாடு என்று ஒவ்வொருவரும் பெருமையோடு அழைக்கும் நிலையை உருவாக்க அனைவரும் எந்நாளும் உழைப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஏற்றமிகு ஏழு திட்டங்கள்

ஏற்றமிகு ஏழு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.கீதா ஜீவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றமிகு ஏழு திட்டங்களை தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் பேசியதாவது:-

ஏழு முக்கியமான திட்டங்களை இன்றைக்கு நான் தொடங்கி வைக்கிறேன்.

எந்நாளும் உழைக்கிறேன்

நாளை (இன்று) மார்ச் 1, என்னுடைய 70-வது பிறந்தநாள். இதில் சுமார் 55 ஆண்டுகாலம் அரசியலையே எனது வாழ்க்கையாக அமைத்துக்கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களையும் எனது குடும்பமாக நினைத்து, மிக மிக இளமைக் காலத்திலேயே அரசியலுக்கு வந்தேன். 'அரசியலுக்கு வராமல் போயிருந்தால் என்னவாக ஆகியிருப்பீர்கள்?' என்று கேட்டபோது, 'அரசியலில்தான் நிச்சயம் நான் இருந்திருப்பேன்' என்று பதில் சொன்னவன் நான்.

அரசியல் என்பதை அதிகாரம், என்பதாக இல்லாமல், அதனை கடமையாகவும், தொண்டாகவும், சேவையாகவும் நினைக்க வைத்தவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன். இவர்களது வழித்தடத்தில் வந்திருக்கக்கூடிய நான், கிடைக்கின்ற பொறுப்புகளின் மூலமாக மக்களுக்கு சேவையாற்றும் இலக்குகளை எல்லாக்காலத்திலும் எனக்கு நானே வைத்துக்கொள்கிறேன். எனக்கு யாரும் இலக்கு வைக்கவில்லை. எனக்கு நானே இலக்கு வைத்துக்கொள்கிறேன். அந்த இலக்கை அடையவே எந்நாளும் உழைக்கிறேன்.

தினந்தோறும் திட்டங்கள்

அதனால்தான் மக்கள் பயன்பெறக்கூடிய எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து தொடங்கிவைக்கிறேன். திராவிட மாடல் ஆட்சியில் 'தினந்தோறும் திட்டங்கள்' என்பதுதான் என் திட்டம்! அதாவது, தினந்தோறும் திட்டங்களைத் தீட்டுவதுதான் என்னுடைய பணி. அந்தவகையில், இந்த விழாவில் மிகமுக்கியமான ஏழு திட்டங்களைத் தொடங்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன். இந்த ஏழு திட்டங்களைப் பார்த்தால் கல்வி, சுகாதாரம், விளிம்பு நிலை மக்கள், குழந்தைகள், சமூக மேம்பாடு, சமூகநீதி ஆகிய அனைத்து கருத்தியல்களும் உள்ளடக்கிய திட்டங்களாக தீட்டப்பட்டுள்ளன.

இந்தவரிசையில் இன்னும் பல திட்டங்கள் வர இருக்கின்றன. இந்த திட்டங்களை துறையினுடைய அமைச்சர்கள், துறையினுடைய செயலாளர்கள், அரசு செயலாளர்கள் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்கள் வரை இதனுடைய நோக்கம் சிதைந்துவிடாமல் நிறைவேற்றிக் காட்டவேண்டும் என்று அன்போடு நான் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு எப்படி இருக்கும்?

கோட்டையில் இருந்து நிறைவேற்றும் திட்டமானது, கடைக்கோடி மனிதரையும் சென்றடையவேண்டும். அவர்களது நன்மைக்காகவே இந்த திட்டங்கள் தீட்டப்படுகின்றன. எனது லட்சியம் என்பது, வளமான தமிழ்நாடு! வலிமையான தமிழ்நாடு! வறுமை ஒழிந்த தமிழ்நாடு! சமத்துவத் தமிழ்நாடு! சுயமரியாதைத் தமிழ்நாடு! மாநிலம் என்பது எல்லைகளால் உருவானது அல்ல, எண்ணங்களால் கருவாகி உருவானது! எனவே தமிழ்நாடு என்றால் இப்படித்தான் இருக்கும்! எங்களை உருவாக்கிய தமிழ்நாட்டின் உயர்வுக்காக பணியாற்றி வருகிறோம்.

'ஏ! தாழ்ந்த தமிழகமே!' என்று அண்ணா அவர் காலத்தில் சொன்னார். அந்த நிலைமையை மாற்றி, "எனது ஏற்றமிகு தமிழ்நாடே!" என்று ஒவ்வொருவரும் பெருமையோடு அழைக்கும் நிலையை உருவாக்க நமது திராவிட ஆட்சியில் அனைவரும் எந்நாளும் உழைப்போம்! உழைப்போம்! உழைப்போம்!.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் டாக்டர் இரா.செல்வராஜ் நன்றியுரை கூறினார்.

மேலும் செய்திகள்