ரமலான் நோன்பு திறப்பு: இஸ்லாமியர்களுக்கு அரிசி, நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|ரமலான் நோன்பு திறப்பையொட்டி இஸ்லாமிய மதத்தினருக்கு அரிசி, துணிமணிகள், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
இஸ்லாமிய மதத்தினரின் பண்டிகைகளில் முக்கியமானது ரமலான். ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமிய மதத்தினர் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து, இஸ்லாமிய மதத்தினர் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், ரமலான் நோன்பு திறப்பையொட்டி கொளத்தூரில் இஸ்லாமிய மதத்தினருக்கு அரிசி, துணிமணிகள், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.3.2024) முகாம் அலுவலகத்தில், " உதவுதல் நம் முதல் கடமை" என்ற பெயரில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2,000 இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு திறப்பிற்காக 26 கிலோ அரிசி, துணிமணிகள், பேரிச்சம்பழம், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொண்ட இஸ்லாமியப் பெருமக்கள் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்ததுடன், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருவதற்காகவும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வின்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.